
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். செய்கின்ற வேலையை பக்தியுடன் செய்ய வேண்டும், அப்பொழுது தான் அந்த வேலையில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். மென்மேலும் அந்த வேலையில் உயர்வையும் பார்க்க முடியும். நம் வேலையை மட்டும் செய்வது என்பது சுயநலம் மிக்கது. நம்மால் முடிந்த அளவிற்கு பொதுப் பணியிலும் ஈடுபடும் பொழுது தான் தெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதனால் நம் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களும் அகலும் என்பது நியதி. இந்த வகையில் நமக்கு இருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒரே ஒரு வேலை என்ன வேலை? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
தீராத துன்பங்கள், நோய் நொடிகள் தீரவும், எந்த நோயும் நம்மை நெருங்காமல், பிரச்சனைகள் துரத்தாமல் இருக்கவும் ஆலய உழவாரப் பணியை மேற்கொள்வது நல்ல பலன் கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. உழவாரப் பணியை மேற்கொள்பவர்களுக்கு மருத்துவமனை செல்லக்கூடிய நிலைமையே வராதாம். உழவாரப் பணியை மேற்கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் யாராலும் தீங்குகள் ஏற்படாது.
உழவாரப்பணி என்பது கோவில் ஆலயத்தையும், கோவில் ஆலயத்தை சுற்றியுள்ள பிரகாரங்களையும் சுத்தம் செய்வது ஆகும். ஆலயங்களை சுற்றி புதர் மண்டி கடந்தால் அதை சுத்தம் செய்யலாம், இதுவும் உழவாரப் பணிதான். இப்படி உழவாரப்பணிகள் ஏராளம் உண்டு. அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று உழவாரப்பணி மேற்கொள்கிறேன் என்று மனதார உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.
இப்படி ஒரு வேண்டுதல் வைக்கும் பொழுது உங்களுடைய வேண்டுதல் உடனடியாக நடக்கும் என்பது நம்பிக்கை. உழவார பணி செய்யும் ஆயுதத்தை திருநாவுக்கரசர் கையில் ஏந்தி இருப்பார். நாயன்மார்களும் இப்பணியை செய்தவர்கள். இப்பணியை செய்த அடியார்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்றதில்லை. எந்தவிதமான நோய் நொடிகளும் இவர்களை அண்டியதில்லை. கும்பாபிஷேகம் செய்வதை விட பல மடங்கு புண்ணியத்தை கொடுக்கக் கூடியது இந்த உழவாரப்பணி.
உழவாரப்பணி என்பது கோவில் பிரகாரங்களை கூட்டி பெருக்கி சுத்தம் செய்வது, அங்கு வேண்டாம் என்று தூண்களில் போடப்பட்டிருக்கும் விபூதி, குங்குமங்களை அகற்றி சுத்தம் செய்வது, கற்பூரம் ஏற்றியதால் சுவர்களில் படிந்திருக்கும் கரும்புகைகளை அகற்றுவது, எண்ணெய் பிசுக்குகளை நீக்குவது, கோவிலில் இருக்கும் ஒட்டடைகளை எடுப்பது போன்ற வேலைகளை செய்யலாம். உழவாரப்பணி மேற்கொள்ளும் பொழுது மனதிற்கு அப்படி ஒரு நிம்மதி கிடைப்பதை உங்களால் உணர முடியும். உழவாரப் பணி என்பது கோவிலுக்கு வெளியில் இருக்கும் வேலைகள் மட்டும் அல்ல!
இதையும் படிக்கலாமே:
புரட்டாசி பௌர்ணமி பரிகாரம்
கோவிலில் இருக்கும் திருவிளக்குகளை விளக்கிக் கொடுப்பது, இறைவனுக்கு சாற்றப்படும் மாலைகள் மற்றும் மலர்களை நிர்மால்யம் செய்த பின்பு நந்தவனத்தில் கொண்டு போய் போடுவது, நந்தவனத்தை சுத்தம் செய்வது, செடி கொடிகளை அகற்றுவது, ஆலயங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றி தூய்மைப்படுத்துவது, கோவில்களில் இருக்கும் மின்விளக்குகள், மின்விசிறிகளை சுத்தம் செய்து கொடுப்பது போன்ற விஷயங்களையும் அனுமதி பெற்று செய்யலாம். அது மட்டும் அல்லாமல் இறைவனின் திருமேனியில் இருக்கக் கூடிய தயிர் பசை, எண்ணெய் பிசுக்குகளை சுத்தம் செய்யும் பணி மற்றும் கொடிமரம், உற்சவம் மூர்த்திகள் மீது படிந்திருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்வது, கோவில் குளத்தை தூய்மை செய்தல் போன்றவற்றையும் ஆச்சாரிகளின் அனுமதி பெற்று உழவாரப் பணியாக மேற்கொள்ளலாம்.