
நீண்ட வருட காலமாக குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு 3 அஷ்டமியில் சென்று தரிசனம் செய்ய கிடைக்கக்கூடிய பலன்கள் மற்றும் “தென்திசையின் குருவாயூர்” என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் தல வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கேரள வயநாடு பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னர் ஆதித்தவர்மன், குருவாயூர் கிருஷ்ணரின் தீவிர பக்தராக இருந்தார். ஒருமுறை, கிருஷ்ணர் மன்னரின் கனவில், கையில் வெண்ணெயுடன் குழந்தை கண்ணனாக காட்சியளித்தார். மேலும், தனக்கு கோயில் அமைய வேண்டிய இடத்தையும் அவரே கூறினார். “நாளை காலை சூரிய உதயத்தின் போது அருகே இருக்கும் கானகத்திற்குச் செல். அடர்ந்த மரச்சோலைக்குள் சிறிய குளம் ஒன்றின் அருகே கருடன் இருப்பான். அவ்விடமே எனக்கு கோயில் அமைய ஏற்ற இடம்” என்று கிருஷ்ணர் கூறினார்.
கனவில் கண்டபடி, மறுநாள் காலை மன்னர் ஆதித்தவர்மா அவ்விடத்திற்குச் சென்றபோது, கருடனைக் கண்டார். அங்கேயே தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்து கோயிலைக் கட்டினார். சுவாமிக்கு “நவநீத கிருஷ்ணர்” (நவநீதம் என்றால் வெண்ணெய்) என பெயர் சூட்டினார்.
இக்கோவிலின் மூலவர் கிருஷ்ணர், குழந்தை வடிவில் (பாலகிருஷ்ணன்), தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் வைத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்றபடி காட்சியளிக்கிறார். உற்சவர் ராஜகோபாலர், ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சியளிக்கிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தபோது குழந்தை பருவத்தில் “கிருஷ்ணர்” என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது “ராஜகோபாலர்” என்றும் அழைக்கப்பட்டதால், இங்கு மூலவராக கிருஷ்ணரும், உற்சவராக ராஜகோபாலரும் எழுந்தருளியுள்ளனர்.
இந்தக் குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குழந்தை வரம் அருளும் சிறப்புத் தலமாக போற்றப்படுகிறது. தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். இந்த பூஜையில் கலந்து கொண்டு, கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி, பால் பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைத்து, தொடர்ந்து மூன்று அஷ்டமி நாட்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாட்களில் வந்து வழிபட்டு வெண்ணெய் மற்றும் பால் வாங்கி உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தினமும் கிருஷ்ணரின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. மூலஸ்தானம் எதிரிலுள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இங்கு கிருஷ்ணரே பிரதானம் என்பதால் கோஷ்ட மூர்த்திகள் இல்லை. காவல் தெய்வம் பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார். இரவு நேரத்தில் கிருஷ்ணன் கோயில் பகுதியை வலம் வந்து காவல் செய்கிறார். இத்தலத்தின் வெளிப்பிரகாரத்தில் கொன்றை மரத்தடியில் நாகர் சிலைகளும், சிவலிங்கமும் உள்ளன. மூலவரின் வலப்புறம் கன்னி விநாயகர் சன்னிதியும், இடப்புறம் சாஸ்தா சந்நிதியும் உள்ளன.
இதையும் படிக்கலாமே:
மன அழுத்தம் நீக்கும் முருகன் பாடல்
சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ராஜகோபால சுவாமியே தேரில் எழுந்தருளுவார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் குழந்தை போலவே காட்சியளிப்பார். மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். வைகுண்ட ஏகாதசியன்றும் உற்சவர் ராஜகோபாலர் சொர்க்கவாசல் கடக்கிறார். நெல்லி மரம் இக்கோவிலின் தல விருட்சமாகும். இந்தக் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் புனரமைக்கப்பட்டு புதிய ராஜகோபுரத்துடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.