
மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று கூறுவது உண்டு. அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசலின் வழியாக பெருமாளை நாம் தரிசனம் செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கி இந்த உலகத்தில் வாழும் வரை அனைத்து விதமான சுகங்களையும் பெறுவதோடு கடைசி காலத்தில் சொர்க்கவாசலை அடைவோம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் மற்ற மாதங்களில் வரக்கூடிய ஏகாதசி அன்று விரதம் இருக்காவிட்டாலும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் பெருமாளின் அருளை பெறுவதற்கு ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு சிறப்பான விழாவாக இருந்தாலும் விரதமாக இருந்தாலும் அன்றைய தினத்தில் வீட்டில் நாம் சிறப்பான வழிபாடுகளை செய்வோம். என்னதான் சிறப்பான வழிபாட்டை செய்ய முடியாவிட்டாலும் அல்லது செய்தாலும் கண்டிப்பான முறையில் தீபம் என்பதை ஏற்றுவோம். தீபத்திற்கு அவ்வளவு சிறப்புகள் இருக்கிறது. தீபம் ஏற்றும் பொழுது எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோமோ அந்த தெய்வம் அந்த தீபத்தில் குடியேறி நமக்கு பரிபூரணமான அருளை தருவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வைகுண்ட ஏகாதசி அன்று பெருமானின் அருளை பெறுவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
பெருமாளுக்கு உரிய வைகுண்ட ஏகாதசி அன்று பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். ஒரு சிலரால் அவர்களுடைய சூழ்நிலையின் காரணமாக விரதம் இருக்க முடியாத நிலை ஏற்படும். அந்த நிலையில் வருத்தம் கொள்ளாமல் இந்த ஒரு எளிமையான தீபத்தை மட்டும் ஏற்றினாலே போதும் பெருமாளின் அருளைப் பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு பெருமாளுக்கு உரிய சில உகந்த பொருட்கள் தேவைப்படும். ஒரே ஒரு நெய் தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.
ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்து அதற்கு மேல் துளசி இலைகளை பரப்பிக் கொள்ளுங்கள். அந்த துளசி இலைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு இந்த தீபத்தில் ஒரு பொடியை நாம் சேர்க்க வேண்டும். அந்த பொடி தான் மிகவும் விசேஷமான பொடி. இந்த பொடியை தயார் செய்வதற்கு இடிக்கல்லோ அல்லது அம்மியையோ பயன்படுத்தலாம். சற்று அதிகமாக தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மிக்ஸி ஜாரில் கூட நாம் பொடி செய்து கொள்ளலாம்.
இதற்கு பச்சை கற்பூரம் ஒரு துண்டு, ஒரு கிராம்பு, இரண்டு துளசி இலைகள், ஒரு ஏலக்காய் இவற்றை சேர்த்து பொடி செய்ய வேண்டும். பிறகு இதனுடன் ஜவ்வாது பொடியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் பெருமாளுக்கு உகந்த பொடியாக கருதப்படுகிறது. இந்த பொடியில் இருந்து ஒரு சிட்டிகையை எடுத்து அந்த நெய் தீபத்தில் போட்டு விடுங்கள். அவ்வளவுதான் பெருமாளுக்கு உகந்த தீபம் தயாராகிவிட்டது. மேலும் இந்த தீபத்தை ஏற்றுவதோடு பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு டம்ளரில் தண்ணீரை வைத்து அதில் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தையும் இரண்டு துளசி இலைகளையும் போட்டு வைத்தாலே பெருமாள் மனம் குளிர்ந்து நமக்கு பரிபூரணமான அருளை தருவார்.
இதையும் படிக்கலாமே:கோபம் வராமல் இருக்க மந்திரம்
வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பதுதான் சிறப்பு. இருப்பினும் ஒரு சிலரால் விரதம் இருக்க முடியவில்லை என்னும் பட்சத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைத்து பெருமானின் அருளை பெறலாம். விரதம் இருப்பவர்களும் இந்த தீபத்தை ஏற்றி வைத்து இரட்டிப்பு பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.