
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தை பார்த்து பிறர் பொறாமைப்படும் பொழுது நமக்கு கண் திருஷ்டி என்பது ஏற்படும். அது அவர்களின் இயலாமையையே குறிக்கிறது. நம்மால் அந்த காரியத்தை செய்ய முடியவில்லை அவர்களால் செய்ய முடிகிறது என்று நினைக்கும் பொழுதே அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பால் நமக்கு பாதிப்புகள் உண்டாகிறது. இப்படிப்பட்ட பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு எந்த கணபதியை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக வீட்டு வாசலில் கண் திருஷ்டி விநாயகர் என்று ஒரு விநாயகரின் படத்தை மாட்டி வைத்திருப்போம். ஆனால் அந்த விநாயகருக்கு உரிய வழிப்பாட்டு முறையை யாரும் பின்பற்ற மாட்டார்கள். அந்த விநாயகரை வீர கணபதி என்று கூறுவோம். கைகளில் ஆயுதங்களை ஏந்தி இருக்கக்கூடிய இந்த வீரகணபதி என்பவர் விநாயகரின் உடைந்த தந்தத்திலிருந்து வெளிப்பட்டவராக திகழ்கிறார்.
ஆயுதங்களை வைத்திருக்கும் உக்கிர தெய்வங்களுக்கு நாம் முறையாக வழிபாடு செய்தால் தான் அவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் உக்கிர விநாயகர் திகழக்கூடிய இந்த வீரகணபதியை நாம் முறையாக வழிபட்டால்தான் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் செய்ய வேண்டும். மாலை 6 மணியில் இருந்து 10 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு வீட்டில் இருக்கும் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டை செய்யும் பொழுது வீரகணபதிக்கு பானகம், செவ்வாழை, மாதுளம் பழம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
எப்பொழுதும் செவ்வாய்க்கிழமையில் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வோம் அல்லவா? அந்த முறையில் வீட்டில் இருக்கும் அனைவரும் வீட்டிற்குள் வந்த பிறகு பூஜையறை, வரவேற்பறை மற்றும் வீரகணபதி இருக்கும் இடத்தில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிற்குள் இருக்கக்கூடிய அனைத்து விதமான மின்விளக்குகளையும் அணைத்து விட வேண்டும். பிறகு சாம்பிராணி தூபம் வீடு முழுவதும் காட்ட வேண்டும்.
அடுத்ததாக விநாயகப் பெருமானுக்கு சிவப்பு மலர்களால் “ஓம் வீரகணபதியே நமஹ” என்று 11 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அவரிடம் முழுமனதோடு எங்களிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலக வேண்டும். எந்தவித தீய சக்திகளாலும் எங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் பூ சூடம் என்று விற்கும்.
அதுவும் ஒரு வகையான கற்பூரம் தான். இந்த கற்பூரத்தை மொத்தம் 8 துண்டுகளை வாங்கி ஒன்றாக சேர்த்து வைத்து வீட்டின் இருக்கும் ஒவ்வொருவரின் தலையையும் தனித்தனியாக சுற்ற வேண்டும். பிறகு வீட்டை முழுவதுமாக சுற்றிவிட்டு வாசலில் வைத்து எரித்துவிட்டு வீட்டிற்குள் வரவேண்டும்.
இதையும் படிக்கலாமே மகா சங்கடஹர சதுர்த்தி வழிபடும் முறை
இப்படி செவ்வாய்க்கிழமையும் அமாவாசை தினத்திலும் நாம் தொடர்ச்சியாக வீர கணபதியை மனதார நினைத்துக் கொண்டு இந்த வழிபாட்டு முறையை பின்பற்றும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகளும், ஏவல், பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்களும் முற்றிலும் நீங்கும். அதனால் நமக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது.