
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உரிய கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் முருகப்பெருமானுக்கு உகந்த மாதமான வைகாசி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைக்கு அதிக அளவில் பலன்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட வைகாசி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமானே எந்த முறையில் வழிபட்டு நியாயமான வேண்டுதலை வைத்தால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நாம் ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட வேண்டுதல்கள் என்பது இருக்கும். அவை நியாயமான வேண்டுதலாகவும் இருக்கலாம். ஒரு சில சமயம் நம்முடைய தேவைக்கு மிகுந்த வேண்டுதலாகவும் இருக்கலாம். ஏதாவது ஒரு வேண்டுதல் அதுவும் நியாயமான வேண்டுதல் நம்முடைய சக்திக்கு உட்பட்ட வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் அந்த ஒரு வேண்டுதலை முன்வைத்து முருகப்பெருமானை நாளைய தினம் வழிபாடு செய்து பாருங்கள். அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.
இந்த வழிபாட்டை ஜூன் மாதம் மூன்றாம் தேதி வைகாசி மாதத்தின் 20ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று ராகுகால, எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் சுத்தமாக குளித்திருக்க வேண்டும். அசைவத்தை சாப்பிட்டிருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து, செவ்வரளி மலர்களை மாலையாக சூட்டிக் கொள்ளுங்கள். முருகப் பெருமானுக்கு முன்பாக ஒன்று அல்லது ஆறு என்ற எண்ணிக்கையில் நெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு செவ்வாய்க்கிழமை தோறும் வெற்றிலை தீபம் ஏற்றும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலருக்கு செவ்வாய்க்கிழமை தோறும் துவரம் பருப்பு தீபம் ஏற்றும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அந்த தீபத்தை ஏற்றி வைத்து பிறகு இந்த வழிபாட்டை செய்து கொள்ளலாம். பிறகு முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக கையில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பச்சரிசியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் பச்சரிசி இல்லை என்பவர்கள் சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் அரிசியை கூட எடுத்து வைத்துக் கொள்ளலாம். பச்சரிசியை வலது கையில் வைத்துக்கொண்டு முருகப்பெருமானை பார்த்தவாறு உங்களுடைய நியாயமான ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்து அது சீக்கிரம் நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு முருகப்பெருமானின் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்த அதிகபட்சம் 20 நிமிடம் வரை கூற வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு கையில் இருக்கக்கூடிய பச்சரிசியை எறும்புகள் இருக்கக்கூடிய இடத்தில் போட்டு விட வேண்டும்.
மந்திரம்
ஓம் அநீஸ்வராய நமஹ
இதையும் படிக்கலாமே: தாரித்ரிய தஹன சிவ ஸ்தோத்திரம்
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து வைகாசி செவ்வாய்க்கிழமை கூறுபவர்களுக்கு அவர்களுடைய நியாயமான வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.