
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து கொஞ்சம் வித்தியாசமாக செய்வதென்றால் பன்னீர் மற்றும் சிக்கன் என இப்படி வெரைட்டியாக செய்வோம். ஆனால் குடை மிளகாயை வைத்து ரொம்பவே சுலபமாக அதே நேரத்தில் அதிக டேஸ்ட்டான ஒரு சூப்பரான சப்பாத்தி சைடிஷ் எப்படி செய்வது என்று தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்த கிரேவி செய்வதற்கு முதலில் ஒரு வெங்காயம் ஒரு குடை மிளகாய் ஒரு தக்காளி அனைத்தையும் கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இரண்டு வெங்காயம் இரண்டு தக்காளி இதையும் கொஞ்சம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பெரிதாக நறுக்கி வைத்து வெங்காயம் குடைமிளகாயை சேர்த்து லேசாக வதக்குங்கள். அதன் பிறகு தக்காளியும் சேர்த்து தக்காளி மிருதுவாகும் வரை வதக்கினால் போதும் குழைய வதக்க கூடாது. இவை மூன்றும் லேசாக வதங்கியதும் இதை வேறு ஒரு பிளேட்டிற்கு மாற்றி வைத்து விடுங்கள்.
இப்போது அடுப்பில் மீண்டும் அதே கடாயை வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, இரண்டு கிராம்பு சேர்த்து லேசாக பொரிந்தவுடன், பொடியாக நறுக்கி வைத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கிய பிறகு ஒரு ஸ்பூன் கடலைமாவை சேர்த்து லேசாக பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
இவையெல்லாம் வதங்கிய பிறகு நறுக்கி வைத்த தக்காளியும் சேர்த்து தக்காளி குழைந்து வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து கலந்து மூடி போட்டு 5 நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.
இந்த கிரேவி கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு நாம் ஏற்கனவே வதக்கி வைத்த வெங்காயம் குடைமிளகாய் தக்காளி இதில் சேர்த்து ஒரே ஒரு முறை மட்டும் பிரட்டி கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான வெங்காயம் குடைமிளகாய் கிரேவி அட்டகாசமாக தயாராகி விட்டது.
இந்த கிரேவி செய்வது மிக மிக சுலபம் ஆனால் இதன் சுவையும் மிகவும் பிரமாதமாக இருக்கும் ஒரு முறை சப்பாத்திக்கு சைடிஷ் ஆக இதை செய்து சாப்பிட்டு பாருங்க. இனி வேறு எதையுமே சைட் டிஷ்யா செய்ய மாட்டீங்க. அந்த அளவுக்கு டேஸ்ட் சூப்பரா இருக்கும்.