
காலம் காலமாக தலைவாசலில் வேப்பிலை தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்துள்ளது. காலப்போக்கில் இந்த நடைமுறையானது வழக்கத்திலிருந்து மாறுபட்டது. பின்பு அது முற்றிலும் மறக்கடிக்கவும் பட்டது. தலைவாசலில் முறையாக வேப்பிலை தீபம் ஏற்றி வரும் குடும்பத்தில் நோய் நொடிகளும் அண்டாது, பிரச்சனைகளும் தீண்டாது என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய வேப்பிலை தீபத்தை ஏற்றும் முறையைப் பற்றிய தொகுப்பினை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் காண இருக்கிறோம்.
வீட்டிற்கு ஒரு வேப்பிலை மரம் இருப்பது ரொம்பவே நல்லது என்று நம் முன்னோர்கள் கூறியள்ளனர். வேப்பிலை மரம் இல்லாத வீடுகளே அக்காலத்தில் கிடையாது. பெருகிவரும் ஜனத்தொகைக்கு ஏற்ப மரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. வேப்பிலை நோய் தீர்க்கும் அருமருந்தாக இருக்கிறது. இந்த வேப்பிலையை கொண்டு தலைவாசலில் தீபம் ஏற்றுவது எப்படி?
முதலில் தலைவாசலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தலைவாசல் சுத்தமுடன் இருப்பது அவசியமாகும் ஏனெனில் அங்கு தான் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அதனால் தான் அதற்கு மஞ்சளும், குங்குமம் வைத்து தினமும் விளக்கேற்றி வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். சுத்தம் செய்த பின்பு சிறிது மஞ்சள் பொடியை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் பொடியால் வாசலில் இரண்டு புறங்களிலும் சிறிய அளவில் சதுரமாக வரைந்து கொள்ளுங்கள்.
சதுரம் சங்கடங்களை போக்கவல்லது. தூய மஞ்சளில் சதுர கோலம் இட்ட பின்பு அதன் மீது ஒரு வேப்பிலை கொத்தை வைக்க வேண்டும். வேப்பிலையின் நுனி பகுதியானது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருப்பது நல்லது. பின்னர் அதன் மீது ஒரு சிறிய மண் அகல் விளக்கை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின் அதில் தூய நல்லெண்ணெய் அல்லது தீபம் ஏற்றும் எண்ணெயை ஊற்றி மஞ்சள் திரியிட வேண்டும். ஒரு வெள்ளைத் திரியில் மஞ்சளை தோய்த்து காய வைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் திரியை போட்டு தீபம் ஏற்றி வர குடும்பத்தில் இருக்கும் தீராத சங்கடங்களும், வேதனைகளும் தீர்வதாக நம்பிக்கை உண்டு.
இதே போல ஒவ்வொரு நாளும் மாலை வேலைகளில் தலைவாசலில் வேப்பிலை தீபம் போட்டு ஏற்றி வந்தால் குடும்பத்தில் தீராத நோய்கள் இருப்பினும் அது விரைவில் தீரும். மகாலட்சுமியின் அருள் கிட்டும். குலதெய்வ வாசம் மேலோங்கி காணப்படும், இதனால் குடும்பம் சுபீட்ச நிலைக்கு உயர்வடையும். பொருளாதார ரீதியான சிக்கல்கள் தீர்ந்து மன நிம்மதி கிட்டும். சொந்த பந்தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வேப்பிலை மரம் வீட்டில் இருந்தால் அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு தினமும் ஒரு சிறு மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வையுங்கள். பில்லி, சூனியம், பொல்லாத கண் திருஷ்டிகள் போன்ற எந்த தீவினைகளும் உங்களை நெருங்காது.
இதையும் படிக்கலாமே:
ராஜ வாழ்க்கையை தரும் சிவன் வழிபாடு
மனவேதனைகளும், உடல் வேதனைகளும் தீர்வதற்கு இந்த வேப்பிலை தீபத்தை மாலை தோறும் தவறாமல் உங்கள் வீட்டு தலைவாசலிலும் ஏற்றி வாருங்கள். நன்மை பல பெற்று நல்வாழ்வு பெறுங்கள்.