
ஒவ்வொரு வீட்டிலும் காலை அல்லது மாலை நேரத்தில் சாதத்தை தவிர பல விதமான உணவு வகைகள் செய்வதுண்டு. அதில் பெரும்பாலும் தோசையை தான் அனைவரும் விருப்பமாக சாப்பிடுகின்றனர். தோசை செய்தால் ஆளுக்கு எத்தனை தோசை வேண்டும் என்று கேட்டு அந்த எண்ணிக்கையில் சுட்டுக் கொடுத்தாளல் ஒரு தோசை கூட மிச்சம் ஆகாது. ஆனால் என்றாவது ஒருநாள் இட்லி செய்யும் பொழுது சரியாக இவ்வளவு போதும் என்று செய்து வைத்தாலும், அதில் ஒரு சில இட்லிகள் மீதமாகிவிடும். இவ்வாறு மீதமான இட்லியை மறுநாள் எவரும் சாப்பிட விரும்புவதில்லை. இதுபோன்ற நேரங்களில் இந்த இட்லியை வீணாக கீழே கொட்டாமல், இவ்வாறு மசாலா இட்லி செய்து கொடுத்து பாருங்கள். நீங்கள் செய்தது கொஞ்சம் கூட மிச்சமில்லாமல் முழுவதுமாக காலியாகிவிடும். இதன் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
மீதமான இட்லி – 5, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, இஞ்சி சிறிய துண்டு – 1, மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், சர்க்கரை – ஒரு ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், மிளகுத்தூள் – கால் ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், எ0ண்ணெய் – 150 கிராம், கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன். கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இட்லியை நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, 150 கிராம் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பிறகு மீதமுள்ள எண்ணெயை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு, மறுபடியும் அதே கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
பின்னர் எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். இவை இரண்டும் என்ணெயில் நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு தக்காளியையும் சேர்த்து நன்றாக மசிந்து வேகும் வரை வதக்கி விட்டு, அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்தக் கலவை நன்றாக கொதித்து, சற்று கெட்டியாகி, மிளகாய் தூள் வாசனை சென்றதும் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து கலந்துவிட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மசாலா இட்லி தயாராகிவிடும்.