
மகாளயப் பட்சத்தில் வரக்கூடிய நவமி திதியை தான் அவிதவா நவமி என்று சொல்லுவார்கள். தற்போது மகாளய பட்ச நாட்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவிதவா என்றால் சுமங்கலையாக இருக்கக்கூடிய பெண்களை குறிக்கிறது. நம்முடைய வீட்டில் மறைந்த சுமங்கலி பெண்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கான திதி தர்ப்பணங்களை செய்து, அவர்களை சாந்தி படுத்தக் கூடிய நாள் தான் இந்த அவிதவா நவமி.
இன்றைய தினம் உங்கள் வீட்டில் மறைந்த சுமங்கலி பெண்களை நினைத்து, இந்த அவிதவா நவமி வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஒரு வீட்டில் சுமங்கலையாக மறைந்த பெண்களை, வருடத்தில் ஒருமுறையாவது நினைவுகூர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். தை மாதம் வெள்ளிக்கிழமை, ஆடி வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது வழக்கமாக இருக்கும்.
அந்த வரிசையில் இந்த மகாளய பட்சத்தில் வரும் நவமி திதி அன்றும் அந்த மறைந்த சுமங்கலி பெண்களை நம்முடைய வீட்டில் நினைவு கூர்ந்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். இன்று நீங்கள் செய்யும் வழிபாடு நேராக உங்கள் முன்னோர்களை போய் சேரும். உங்களுடைய வழிபாடு சிறப்பான பலனை கொடுக்க இந்த நாளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
உங்களுடைய வீட்டில் உங்கள் கணவர் வழி சொந்தமாக இருந்தாலும் சரி, அல்லது தாய் வழி சொந்தமாக இருந்தாலும் சரி, யாரேனும் சுமங்கலிகளாக இருந்திருந்தால், அவர்களை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய புகைப்படம் உங்களுடைய வீட்டில் இருந்தால் அந்த புகைப்படத்திற்கு வாசம் நிறைந்த பூக்களை போட்டு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த திருவுருவப்படத்திற்கு முன்பாக அவர்களுக்கு பிடித்த விஷயங்களை வைத்து வழிபாடு செய்யலாம்.
கூடவே சுமங்கலி பெண்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை ஒரு தாம்பல தட்டில் அடுக்கி வைத்து விடுங்கள். வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் கண்ணாடி வளையல், முடிந்தால் ஒரு புடவை ஒரு ரவிக்கை துணி வைத்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
புடவை தானம் கொடுக்க முடியாது என்பவர்கள் ஒரே ஒரு ரவிக்கை துணையாக வைத்து ஒரு 11 ரூபாய் காணிக்கை வைத்து மனம் உருகி மறைந்த முன்னோர்களை வழிபாடு செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வழிபாட்டை முடித்துவிட்டு வழிபாட்டில் வைத்த பொருட்களை எல்லாம் ஒரு சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுக்க வேண்டும்.
உங்களுடைய வீட்டில் ஏதேனும் சுப காரிய தடைகள் இருக்கிறது. வீட்டில் திருமண வயதில் இருக்கும் பெண் குழந்தைக்கோ, ஆண் குழந்தைக்கோ திருமணம் நடக்கவில்லை, திருமணமான பிள்ளைகளுக்கு குழந்தை வரம் இல்லை அல்லது வேறு ஏதாவது சுபகாரிய தடைகள் அதிகமாக இருந்தால், கணவன் மனைவிக்குள் ஒரு அன்னியூன்யம் இல்லாமல் இருந்தால், இந்த வழிபாட்டை செய்யும் போது அந்த பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
உங்களால் இந்த வழிபாட்டை வீட்டில் செய்ய முடியவில்லை என்றாலும் இன்று கவலைப்பட வேண்டாம். இன்று மாலை வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். முன்னோர்களை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு தாம்பல தட்டில் வெற்றிலை பாக்கு பூ பழம் ஒரு ரவிக்கை துணி வைத்து உங்களால் எத்தனை பேருக்கு கொடுக்க முடியுமோ, அத்தனை பேருக்கு தானம் கொடுக்கலாம்.
குறைந்தபட்சம் ஒருவருக்கு கொடுங்கள். அதிகபட்சம் 3, 5, 9, 11 இப்படி எந்த கணக்கில் கொடுத்தாலும் தவறு கிடையாது. அது உங்களுடைய பொருளாதார வசதியை பொருத்தது. எதுவுமே இல்லை என்றாலும் இந்த பதிவை படிக்கக்கூடிய இந்த ஒரு நிமிடத்தில் உங்களுடைய முன்னோர்களை மனதில் நினைத்து வணங்கும்போதும், அந்த சுமங்கலின் பெண்களின் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்தை வந்து சேரும். நீங்கள் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறுவீர்கள்.
இதையும் படிக்கலாமே: மனக்குழப்பத்தை நீக்கும் நட்சத்திர வழிபாடு
உங்கள் குடும்பம் சுபிட்சம் பெறுவதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய அடுத்த சந்ததியினரை வாழ வைக்கக்கூடிய எளிமையான பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கை இருந்தால் இதை பின்பற்றி பலன் பெறலாம்.