
இறந்து போன நம் மூதாதையர்கள் பூமிக்கு வந்து நம்மை ஆசீர்வதிக்கும் காலமாக இந்த பித்ரு பக்ஷ காலம் பார்க்கப்படுகிறது. பித்ரு பக்ஷம், சிரார்த்த பக்ஷம், மஹாளய பக்ஷம் என்றும் இக்காலத்தை குறிப்பிடுவார்கள். நாளை 17 செப்டம்பர் 2024 அன்று துவங்கி வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி வரை நீடிக்கக் கூடிய 16 நாட்கள், முன்னோர்களுக்காக பூஜைகள் செய்வது வழக்கம். மகாலய பட்சத்தில் முன்னோர்கள் வழிபாடு என்பது எவ்வளவு முக்கியம்? என்ன செய்தால் அவர்களின் சாபம் பெறாமல், பரிபூரண ஆசியை பெறலாம்? என்பதை பற்றிய தொகுப்பினை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் காண இருக்கிறோம்.
பித்ரு பக்ஷ நாட்களில் முன்னோர்களுக்கான விரதத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த நாட்களில் பித்ருலோகத்தில் இருந்து இறந்து போன ஆத்மாக்கள் அத்தனை பேரையும் பூமிக்கு அனுப்பி வைப்பார்கள். அவரவர் அவரது குடும்பத்தினை பார்க்க நம்மை தேடி வரும் பொழுது அவர்களை நினைத்து பூஜைகளும், தானங்களும் செய்து வருவதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர். முன்னோர்களின் 16 நாட்கள் என்பதையே பித்ரு பக்ஷா என்று குறிப்பிடுவர்.
முன்னோர்கள் வரும் சமயத்தில் அவர்களை நினைக்காமல் பூஜை, புனஸ்காரங்கள் எதுவும் செய்யாமல் இருந்தால் அவர்களது மனம் வாடி போய்விடும். அவர்கள் மனதார சாபம் கொடுக்காவிட்டாலும், அந்த வாடிய உள்ளத்தால் பல்வேறு துன்பங்களுக்கு நாம் ஆளாக நேரிடும். எந்த சாபத்தை மனிதன் தன் வாழ்நாளில் பெற்றாலும் பித்ரு சாபத்தை மட்டும் பெற்று விடவே கூடாது என்பார்கள். பொல்லா சாபமாக கருதப்படும் பித்ரு சாபம் பெறாமல் இருக்க தர்ப்பணங்களும், பூஜைகளும் முன்னோர்களுக்காக நாம் செய்ய வேண்டும்.
16 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பித்ரு தர்ப்பணம் செய்யலாம். சிரார்த்தம், தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு மனிதன் அடைய வேண்டிய 16 செல்வங்களும் கிடைக்க பெறும் என்பது ஐதீகம். முன்னோர்கள் உள்ளம் மகிழ்ந்தால் அந்த தலைமுறை எவ்வளவு துன்பங்களில் ஆட்ப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து விடுதலை பெற்று, தோஷங்கள் நீங்கி புண்ணியங்கள் பெருக ஆரம்பிக்கும். வழிவழியாக வம்சம் செழிக்கும். சுகபோக வாழ்க்கை கிட்டும் என்பது நம்பிக்கையாக கொண்டாடப்படுகிறது.
பௌர்ணமி அன்று துவங்கக்கூடிய இந்த மகாலய பக்ஷத்தில் எள்ளும், தண்ணீரும் இறைத்து நீத்தார் கடன் அடைக்க வேண்டும். பிண்டம் வைத்து, படையல் போட்டு தர்ப்பணமும் கொடுக்கலாம். முன்னோர்களுக்கான பூஜைகளை வீட்டில் சாதாரணமாகவும் செய்யலாம். அவர்களுக்கு பிடித்ததை எல்லாம் படையல் போட்டு அவர்களை மனதில் நினைத்து வழிபட்டாலே முன்னோர்கள் ஆசி நமக்கு கிடைக்கும்.
அன்றைய தினம் காகத்திற்கு தவறாமல் படையல் வைக்க வேண்டும். இறந்து போனவர்கள் நம் வீட்டை தேடி வரும் பொழுது அவர்களை நினைத்து புண்ணிய காரியங்களான தான, தர்மங்களை செய்ய வேண்டும். தானதர்மம் என்றதும் பெரிதாகத்தான் என்பது இல்லை, நம்மால் முடிந்தவர்களுக்கு உணவு பொட்டலம் வாங்கி கொடுத்தால் கூட போதும், அவர்களின் உள்ளம் வெகுவாக மகிழும். பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உணவளிக்கலாம். இப்படி செய்வதன் மூலம் பித்ருகளின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:
கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க
மகாலய பட்சம் முடியும் அமாவாசை தினத்தில் பொதுவாகவே பித்ரு பூஜைகள் செய்வது வழக்கம். வருடம் தோறும் முன்னோர்களை நினைக்காவிட்டாலும், அந்த ஒரு நாளில் முன்னோர்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அவர்களுடைய ஆசி சாபமாக மாறாமல் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். ஒரு குடும்பம் சந்ததி சந்ததியாக எந்த குறையும் இல்லாமல் இருக்க முன்னோர்களின் ஆசீர்வாதம் கண்டிப்பாக அவசியமாகும், எனவே அவர்களை மறக்காமல் இவற்றை செய்து பாருங்கள், உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்வதை காணலாம்.