கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம் தான் என்றாலும், அது எவ்வளவு கால அளவிற்கு நீள்கிறது? என்பதை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் நிம்மதியின் அளவையும் நாம் கணித்து விட முடியும். எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவிக்குள் இந்த ஒரு விஷயத்தை கடைபிடிக்கும் பொழுது, மலை போல் வந்த சண்டையும், பனி போல் கரையும். அப்படி நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
எலியும் பூனையுமாக சண்டை போட்டாலும் அன்னோன்யமாக மீண்டும் உடனே ஒன்று சேரும் கணவன் மனைவிக்குள் பெரிதாக எந்த ஒரு விஷயமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்குள் அடிப்படை புரிதல் இருப்பதால் தான் எவ்வளவு சண்டை போட்டாலும், மீண்டும் இணைந்து விடுகின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத பொழுது தான் சண்டை நீண்டு கொண்டே போகும்.
நீயா நானா என்கிற போட்டி எல்லாம் வேறு எந்த உறவிலும் நாம் போட்டுக் கொள்ளலாம், ஆனால் கணவன் மனைவி என்று வரும் பொழுது இருவருமே சரிசமமாக விட்டுக் கொடுக்க வேண்டும். ஒருவர் இறங்கி போயும், இன்னொருவர் ஈகோவுடனும் உட்கார்ந்து கொண்டிருந்தால், அந்த இருவருக்குமே கடைசி வரை நிம்மதி கிடைக்காது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
கணவன் மனைவிக்குள் பிரச்சனை தலை தூக்கும் பொழுது யாராவது ஒருவர் தான் அதை ஆரம்பித்து வைத்திருப்பார்கள். ஆரம்பித்து வைத்தவர் பிள்ளையை கிள்ளிவிட்டது போல கிள்ளிவிட்டு அமைதியாகி விடுவார். ஆனால் மற்றொருவரோ நாம் சும்மா இருந்தாலும் நம்மை சீண்டி விட்டுக் கொண்டே இருக்கிறாரே என்று சும்மா கிடந்த சங்கு சத்தமாக ஊதுவது போல வார்த்தைகளால் பொரிந்து தள்ளிவிடுவார்கள். கடைசியில் கெட்ட பெயர் என்னமோ சங்கு ஊதியவருக்கு தான். பிள்ளையை கிள்ளிவிட்டவர் அமைதியாக நல்ல பெயர் எடுத்து விடுவார்.
கணவன் மனைவிக்குள் இந்த புரிதல் தான் முதலில் தேவை. சண்டையில் யார் பிள்ளையை கிள்ளி விடுகிறார்கள்? என்பதை அறிந்து கொண்டாலே, பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். மற்றொருவர் அந்த சமயத்தில் தேவையில்லாத ஆர்ப்பாட்டம் செய்வதை விட, மௌன விரதம் கடைபிடிக்கலாம். எப்படியும் திரும்ப சண்டை முடிந்து சமாதானம் தான் செய்யப் போகிறோம். அதற்குள் இத்தனை கலவரம் ஏனோ? இதனால் நமக்குத் தான் பிபி, டென்ஷன் எல்லாம் வரும், எண்ணமோ சொல்லிட்டு போகட்டும் என்று எதையும் அதிகம் போட்டு அலட்டிக் கொள்ளாமல் மௌனமாக கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து மௌன விரதம் இருந்து பாருங்கள்.
மந்திரம்:
“ஓம் மனி பத்மே ஹம்”
ஒரு 18 நிமிடம் கஷ்டப்பட்டு எதுவும் பேசாமல் மௌனத்தை கடைபிடித்து இந்த மந்திரத்தை சொன்னால் போதும் உங்களுக்குள் மலை போல் வர வேண்டிய பிரச்சனை பனி போல் கரைந்து ஓடிவிடும். பிறகு நீங்களே நினைத்தாலும் உங்களால் சண்டையிட முடியாது. எந்த பிரச்சனைக்கும் முதலில் புரிதல் தேவை. எதற்காக பிரச்சனை? அதில் நியாயம் இருக்கிறதா? இல்லையா? என்பதை உணர்ந்து புரியாதவர்களுக்கு நீங்கள் சாந்தமாக கோபம் இல்லாமல் இருக்கும் சமயத்தில் புரிய வையுங்கள். எல்லா சமயத்திலும் யாராலும் பொறுத்து கொண்டே போக முடியாது, ஆனால் தேவையற்ற சண்டைகள் எழும் சமயத்தில் பொறுத்து போவதால் பொன் போன்ற வாழ்வு அமையும் என்றால் ஏன் பொறுத்து போகக்கூடாது? என்பதை சிந்தியுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பௌர்ணமியோடு பிறக்கும் புரட்டாசி 1 வழிபாடு
விட்டுக்கொடுப்பது நாமாக இருப்பின் கெட்டுப் போவது எதுவும் இல்லை. இன்று இல்லாவிட்டாலும் விட்டுக் கொடுத்ததற்கான பலன் அன்பாக ஊற்றெடுத்து, என்றாவது ஒரு சமயத்தில் நமக்கு நம்முடைய கணவனிடம் இருந்தோ அல்லது மனைவியிடம் இருந்தோ பல மடங்கு பெருகி நிச்சயம் கிடைக்கும். அதுவரை பொறுத்திரு மனமே! மன வலிமையையும், அமைதியையும் கொடுக்கக்கூடிய இந்த மந்திரம் புத்த மந்திரம் ஆகும். சொல்லும் பொழுதே தலை உச்சியிலிருந்து, நெஞ்சுப் பகுதி வரை அதிர்வலைகளை ஏற்படுத்த கூடியது. 18 நிமிடம் சொன்னால் போதும், நிம்மதியான வாழ்வு, பிரச்சனை இல்லாத கணவன் மனைவி உறவு நீடிக்கும்.