
நம்முடைய வாழ்க்கையில் நாம் பலவிதமான வழிபாடுகளை செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். குலதெய்வ வழிபாடு நம்முடைய குலத்தை காக்கக்கூடிய வழிபாடு என்றும், இஷ்ட தெய்வ வழிபாடு நமக்கு பிடித்தமான தெய்வத்தை வழிபாடு செய்யும் முறை என்றும், இறந்த முன்னோர்களை நினைத்து நாம் செய்யக்கூடிய வழிபாடு முன்னோர்களுக்கு உரிய வழிபாடு என்றும் பலவிதமான வழிபாட்டு முறைகளை செய்வது உண்டு. அந்த வரிசையில் செய்யக்கூடிய மிக முக்கியமான ஒரு வழிபாடு என்றால் அதுதான் கன்னி தெய்வ வழிபாடு. நம்முடைய வீட்டில் சிறுவயதிலேயே இறந்த பெண் குழந்தைகளை நினைத்து செய்யக்கூடிய வழிப்பாடாக இந்த வழிபாடு திகழ்கிறது. இந்த வழிபாட்டை ஆடி மாதம் முடிவதற்குள் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அப்படிப்பட்ட கன்னி தெய்வ வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய குடும்பத்தில் பிறந்து ஒரு குறிப்பிட்ட வயது வரை வாழ்ந்து இறந்த பெண் குழந்தைகளை நினைத்து செய்யக்கூடிய ஒரு வழிப்பாடாக தான் இந்த கன்னி தெய்வ வழிபாடு திகழ்கிறது. திருமணம் ஆன பிறகு இறந்தவர்களை முன்னோர்கள் கணக்கிலும் திருமணம் ஆகாமலோ அல்லது பிறந்த ஒரு சில நேரங்களிலேயே இறந்தவர்களாக இருந்தாலும் அவர்களை நினைத்து நாம் கண்டிப்பான முறையில் கன்னி தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட கன்னி தெய்வ வழிபாட்டை ஒரு சிலர் தை மாதத்தில் செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். தை மாதத்திலோ அல்லது ஆடி மாதத்திலோ வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நாம் இந்த வழிபாட்டை செய்ய நம்முடைய வாழ்க்கையில் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும்.
இந்த வழிபாட்டை ஆடி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. வீட்டில் இருந்த பெண் குழந்தை எந்த வயதில் இறந்தார்களோ அந்த வயதிற்குரிய ஆடைகள் மற்றும் அவர்கள் அணிவிக்க தகுந்த ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கி படையலாக போட வேண்டும். அதேபோல் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பொருட்கள் அல்லது அந்த வயதைச் சேர்ந்தவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பொருட்களை படையல் ஆக வைத்து அந்த கன்னி தெய்வத்தை முழு மனதோடு வழிபாடு செய்ய வேண்டும்.
நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இந்த கன்னி தெய்வ வழிபாட்டிற்கு எங்கே தனியாக ஒரு ஓலை பெட்டி வைத்திருப்பார்கள். இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு வாசனை மிகுந்த சாம்பிராணி தூபத்தை காட்டி அந்த பெட்டியில் சாமி கும்பிட்ட பொருட்கள் அனைத்தையும் வைத்து செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் காட்டுவார்கள். அடுத்த வருடம் கன்னி பூஜை செய்யும் பொழுது அதைத் திறந்தால் அதிலிருந்து வாசனை மிகுந்த நறுமணம் வருமாம். அப்படி வருவதன் மூலம் கன்னி தெய்வத்தின் அருளை நாம் முழுமையாக பெறுகிறோம் என்ற அர்த்தமாம்.
இன்றைய காலத்தில் அப்படி பெட்டி எதுவும் தனியாக வைக்க இயலாது என்பவர்கள் இந்த கன்னி தெய்வ வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த வயதில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பெண் குழந்தைக்கு அந்த பொருட்கள் அனைத்தையும் தந்துவிட வேண்டும். படையலாக இட்ட உணவுப் பொருட்களை ஒரு இலையில் வைத்து வீட்டிற்கு வெளியே வைப்பதன் மூலம் அந்த கன்னி தெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து அந்த படையலை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களையும் தடைகளையும் நீக்கும் வழிபாடு
முன்னோர்கள் வழிபாடு எப்படி நம்முடைய குடும்பத்தில் அனைத்து விதமான நன்மைகளையும் கொண்டு வந்து சேர்க்குமோ அதேபோல் வருடத்தில் ஒரு முறையாவது இறந்த கன்னிப்பெண்களை நினைத்து நாம் செய்யக்கூடிய வழிபாடு நம் வாழ்க்கையை மேலும் வளப்படுத்தும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை முடிவு செய்து கொள்கிறோம்.