
நீண்ட நாட்களாக வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் தங்களுடைய வறுமை நிலை மாற வேண்டும் செல்வ செழிப்பில் நல்ல உயர்வு ஏற்பட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். வறுமை நிலையில் இருப்பவர்களைப் போல தான் செல்வ செழிப்புடன் இருப்பவர்களும் மேலும் அதிக அளவில் செல்வத்தை சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். போதும் என்று பலரும் நினைக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த செல்வத்தை பெறுவதற்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கட்கிழமையும் மிகவும் உகந்த கிழமையாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த முறை ஆடி மாதத்தின் முதல் திங்கள் அன்று ஏகாதசியும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் பெருமாளை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமென்றால் மகாலட்சுமியின் அருள் கண்டிப்பாக வேண்டும். மகாலட்சுமியின் அருளை பெற வேண்டும் என்றால் முதலில் பெருமாளின் அருளை பெற வேண்டும். பெருமாளின் அருளைப் பெற பெருமானுக்குரிய நாளில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி பெருமாளுக்கு உரிய நாளாக தான் ஏகாதசி வரக்கூடிய நாள் திகழ்கிறது. இந்த முறை ஏகாதசி வரக்கூடிய நாள் ஆடி மாதத்தின் முதல் திங்கள் கிழமை. ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய முதல் திங்கட்கிழமை பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது அந்த மாதம் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது என்றும் அன்றைய நாளில் இயன்றவர்கள் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் திருப்பதி செல்லாமல் எளிமையான முறையில் எப்படி பெருமாளின் அருளை பெறலாம் என்று பார்ப்போம்.
இந்த வழிபாட்டை ஜூலை மாதம் 21ஆம் தேதி திங்கட்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து நண்பகல் 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் சுவாமி படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பெருமாளின் படத்திற்கு முன்பாக துளசி தீர்த்தத்தை வைத்து ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து கையில் சிறிதளவு பச்சரிசியை வைத்துக்கொண்டு “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு மனதார கூற வேண்டும். பிறகு கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்து செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அந்த பச்சரிசியை எறும்புகள் இருக்கக் கூடிய இடத்தில் போட்டு விட வேண்டும்.
அடுத்ததாக அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். முதலில் கருடாழ்வாரிடம் உங்களுடைய வறுமை நிலை நீங்க வேண்டும் செல்வ செழிப்பு உயர வேண்டும் என்றும் பெருமாளிடம் பணம் தொடர்பான என்ன வேண்டுதலை முன்வைக்க விரும்புகிறீர்களோ அந்த வேண்டுதலை கருடாழ்வாரிடமும் முன்வைத்து வழிபாடு செய்துவிட்டு பெருமாளுக்கு துளசி மாலை, தாமரை பூ போன்றவற்றை வாங்கி கொடுத்து நம்முடைய பெயரில் அர்ச்சனை செய்து பெருமாளிடமும் நம்முடைய வேண்டுதலை முன்வைக்க வேண்டும்.
இவ்வாறு பெருமாளை வழிபாடு செய்த பிறகு பிரசாதமாக கொடுத்த கொடுக்கும் துளசியினை கையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு கொடி மரத்தின் பக்கத்தில் அமர்ந்து “ஓம் ஸ்ரீம் ப்ரிசி நமஹ” என்னும் மந்திரத்தை 111 முறை பெருமாளை பார்த்து கூற வேண்டும். பிறகு மகாலட்சுமியின் அஷ்டகத்தை ஒரு முறை படிக்க வேண்டும். பிறகு கையில் இருக்கக்கூடிய துளசி இலையை உண்ண வேண்டும். பிறகு வீட்டிற்கு வந்து ஒரு வெள்ளை துணியில் மஞ்சளை தடவி அதில் 11 ரூபாய் பணத்தை வைத்து மூட்டையாக கட்டி பெருமாளின் பாதத்தில் வைத்து விடுங்கள். வேண்டுதல் எப்பொழுது நிறைவேறுகிறதோ அப்பொழுது அந்த 11 ரூபாயை திருப்பதி உண்டியலில் சேர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலக
இப்படி தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கட்கிழமை பெருமாளை நாம் வழிபாடு செய்யும்பொழுது பெருமாளின் அருளால் நம்முடைய பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.