- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

ஆடி பெருக்கு விரதம் மற்றும் வழிபாட்டால் கிடைக்கும் பல நன்மைகள்

“ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்பது ஒரு தமிழ் பழமொழியாகும். உலகின் மிகப்பழமையான மனித நாகரீகங்கள் அனைத்துமே நதிக்கரையின் ஓரமாகவே தோன்றியிருக்கின்றன. வேட்டையாடி உணவை உண்ட மனிதர்கள் இத்தகைய நதிக்கரையோரங்களில் உணவு பயிர்களை வளர்த்து, உழவனாக பரிணமித்தான். நமது நாட்டில் நதிகள் அனைத்துமே பெண்தெய்வமாக பாவிக்கப்பட்டு மக்களால் வழிபடப்படுகின்றன. அந்த நதிகள் பலவற்றிற்கும் விழாக்கள் கொண்டாட படுகின்றன. அத்தகைய பண்டிகைகளில் ஒன்று தான் “ஆடி பதினெட்டாம் பெருக்கு” பண்டிகை.

18 ஆம் எண் நமது பாரம்பரியத்தில் சில சிறப்புகளை கொண்டுள்ளது. சபரி மலையில் 18 படிகளை ஏறி ஸ்ரீ அய்யப்பனை தரிசிக்கிறோம். கண்ணன் கீதோபதேசம் செய்த பாரத போர் 18 நாட்கள் நடந்தன. அது போல் இந்த “ஆடி மாதம் 18” ஆம் தேதியும் ஒரு ஆன்மீக சக்தி மிக்க ஒரு தினம் தான். இந்த சிறப்பான தினத்தில் சுமங்கலி பெண்கள் ஆடி பதினெட்டாம் பெருக்கு தின வழிபாடு செய்வது அவர்களின் குடும்பத்திற்கு பல நன்மைகளை தர வல்லதாகும்.

- Advertisement -

இன்றைய தினத்தில் பெண்கள் அதிகாலை 4 மணிக்கே துயிலெழுந்து தலைக்கு குளித்துவிட்டு, எதுவும் உண்ணாமல் உங்களால் முடிந்த சித்ரா அன்னங்களை தயாரித்து, மஞ்சள், குங்குமம், தாலி சரடு, கண்ணாடி போன்ற புது சீர்வரிசை பொருட்களை எடுத்துக்கொண்டு நதிக்கரைக்கு சென்று அந்த நதி அம்மனை வணங்கி பொங்கல் வைக்க வேண்டும். பிறகு அங்கேயே ஓரிடத்தை தூய்மை செய்து இரண்டு தீபங்கள் ஏற்றி, ஒரு தலை வாழையிலையில் பொங்கலையும் சித்ரா அன்னங்களையும் நிவேதனம் வைக்க வேண்டும். பிறகு சீர்வரிசை பொருட்களையும் வைத்து நதி அம்மனுக்கு தேங்காய் உடைத்து, தீப அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்பு புதுமண பெண்கள் தங்களின் பழைய தாலி சரடை நீக்கி, மஞ்சள் பூசப்பட்ட புது தாலிக்கயிற்றை தங்களின் கணவன் மூலமாகவோ அல்லது வயதில் மூத்த சுமங்கலி பெண் மூலமாகவோ அணிவித்து கொள்ள வேண்டும். பின்பு அந்த படையல்களை நம் குடும்பத்தாருக்கும் பிறருக்கும் வழங்க வேண்டும்.

புண்ணிய ஆறுகள் ஏதும் இல்லா ஊரில் வசிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து மாக்கோலம் இட வேண்டும். பின்பு ஒரு பித்தளை சொம்பில் சிறிது மஞ்சளை போட்டு, அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றும் போது அனைத்து புண்ணிய நதிகளின் பெயர்களை உச்சரிக்க வேண்டும். பின்பு அந்த சொம்பு பாத்திரத்தின் நீரில் சில வாசனைமிக்க பூக்களை போட்டு, இரண்டு தீபங்களை ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, சர்க்கரை பொங்கலை நிவேதனமாக வைத்து கற்பூர ஆரத்தி எடுத்து அத்தனை நதி அம்மன்களையும் மனதார வணங்க வேண்டும். பின்பு பெண்கள் தங்கள் தாலிக்கயிற்றை புதிதாக மாற்றிக்கொள்ளலாம். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் இத்தகைய பூஜைகளை மனமொன்றி செய்வதால் அவர்களுக்கும், அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் நன்மைகள் பலவற்றை ஏற்படுத்தும்.

- Advertisement -

ஆடி பதினெட்டாம் தினத்தில் மஹாலட்சுமி மிகவும் ஆனந்தமாய் இருப்பாள் ஆகையால் அன்றைய தினத்தில் அன்னையிடம் எதை வேண்டினாலும் தருவாள் என்பது நம்பிக்கை. மகாலட்சுமியையும் குபேரனையும் வழிபட இது ஒரு மிக சிறந்த தினமாக கருதப்படுகிறது. இன்று மகாலட்சுமிக்கு வீட்டில் பூஜை செய்து வழிபட்டால் குறைவில்லா செல்வம் பெறலாம். இந்த நன்னாளில் தான் பார்வதி அம்மனின் வேண்டுதலுக்கு இணங்க சிவனும் விஷ்ணுவும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக கோமதி அம்மனுக்கு காட்சி அளித்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன. ஆகையால் அனைத்து விதத்திலும் இந்த ஆடி பெருக்கு நாள் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாளாகும். இந்த நன்னாளை தவறவிடாமல் உங்களுக்கு வேண்டிய அனைத்திற்க்கும் இறைவனிடம் வேண்டி பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ஆடி மாதம் குழந்தை பிறக்கலாமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மாத்திரம் மற்றும் ஜோதிட குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we said about the procedure for Aadi perukku viratham and Aadi perukku vazhipadu in Tamil. Aadi perukku is one of the most important festivals in Tamil Nadu.

- Advertisement -