
நவராத்திரியில் மொத்தம் நான்கு வகைகள் உண்டு. பங்குனி மாதம் அமாவாசை முடிந்து கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. ஆனி மாதம் அமாவாசை முடிந்து கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்து கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாத அமாவாசை முடிந்து கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.
இப்போது ஆனி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. நாளைய தினம் ஜூன் மாதம் 25ஆம் தேதி அமாவாசை. அமாவாசை அடுத்த நாள் ஜூன் 26 ஆம் தேதி முதல், ஆசாட நவராத்திரி துவங்குகிறது. ஜூலை 4 ஆம் தேதி வரை ஆஷாட நவராத்திரி இருக்கிறது. இந்த ஒன்பது நாளும் வாராகி உபாசகர்கள் வாராகியை நினைத்து, வீட்டில் பூஜை செய்து நவராத்திரி 9 நாட்களிலும் அன்னையை வழிபாடு செய்தால், தீராத துன்பங்கள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும் என்பது நம்பிக்கை.
ஒரு பித்தளை அல்லது செம்பு சொம்பு நிரம்ப நல்ல தண்ணீர், மற்றும் பன்னீர் கொஞ்சம் ஊற்றி, அதில் வாசனை நிறைந்த ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு, பட்டை ஒரு எலுமிச்சம் பழம் போட்டு அந்த தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டு, அதற்கு மேலே ஒரு மட்டை தேங்காய் வைத்து, நூல் சுற்றி அழகாக அம்பாளை பூஜையறையில் ஒரு வாழைஇலை விரித்து, பச்சரிசி பரப்பி, அதன் மேலே கலச ரூபத்தில் அமர வைத்து, தினமும் மாலை 6:30 மணிக்கு மேல் விளக்கு ஏற்றி ஒரு நெய்வேத்தியம் வைத்து, கலசரூபத்தில் தாயை ஆவாகனம் செய்து, வாராஹிக்கு உகந்த மந்திரங்களை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஒன்பது நாளும் முடிந்ததும், கலச தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் தெளித்து விட்டு, மீதம் இருக்கும் தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி, வழிபாட்டை நிறைவு செய்யலாம். வாய்ப்பு உள்ளவர்கள் இதை செய்யுங்கள். (25 ஆம் தேதி மாலையே பூஜைக்கு தேவையான விஷயங்களை நீங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).
வாராஹி திருவுருவப்படம், சிலை மட்டும் இருந்தால், அந்த படத்திற்கு தினசரி இந்த 9 நாளும் அலங்காரம் செய்து, நெய்வேத்தியம் வைத்து, தீப துப ஆராதனை காண்பித்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
எங்கள் வீட்டில் வாராகி திருவுருவப்படமும் இல்லை சிலையும் இல்லை, மனதார மட்டும் தான் வராஹி தாயை நினைக்கப் போகிறீர்கள். தினமும் நாளை 6:30 மணிக்கு மேல், பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைக்கலாம். வாராகி அன்னையை அந்த தீபச்சுடர் ரூபத்தில், நீங்கள் வைத்த நெய்வேத்தியத்தை ஏற்றுக் கொள்வாள். கொஞ்சம் உதிரி புஷ்பங்களை எடுத்துக்கொண்டு, பூஜை அறையில் ஏதாவது ஒரு அம்பாள் தெய்வத்திற்கு முன்பு, அர்ச்சனை செய்யுங்கள்.
நீங்கள் கலசம் வைத்து வழிபாடு செய்தாலும் சரி, வராகியை திருவுருவப்படமாக சிலையாக வைத்து வழிபாடும் செய்தாலும் சரி அல்லது தீபச்சுடரில் வாராகி ஆவாகனம் செய்து வழிபாடும் செய்தாலும் சரி இந்த ஒரு மந்திர வார்த்தையை மட்டும் ஒன்பது நாளும் சொல்ல வேண்டும்.
வாராஹி தாயே வா வா ! வாராஹி தாயே வா வா ! எங்கள் வீட்டில் வந்து தங்கி நிரந்தரமாக நல்லதை செய்து தர வேண்டும், என்று 27 முறை வாராஹித் தாயே அழைத்து வீட்டிற்குள் ஆவாகனம் செய்து கொள்ளலாம். உதிரி புஷ்பங்களை போட்டு இந்த மந்திரத்தை சொன்னாலே வாராகி சந்தோஷமாக வீட்டிற்குள் வந்து விடுவாள். வாராகி தாயை அன்போடு வீட்டிற்குள் வர வைத்தாலே போதும். இந்த ஆஷாட நவராத்திரி வரக்கூடிய ஒன்பது நாளும் வாராகி காத்துக்கொண்டிருப்பாளாம்.
நம்மை யார் வீட்டிற்கு அழைக்கிறார்களா, அன்போடு அழைக்கிறார்களோ அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று. இந்த வருடம் ஆஷாட நவராத்திரிக்கு வாராகி அன்னையை நீங்கள் மேல் சொன்ன வார்த்தைகளை சொல்லி வரவேற்றுப் பாருங்கள். உங்கள் வீட்டில் வாராஹித் தாய் வந்து அமர்ந்து கொண்டு தேவையான வரங்களை வாரி வாரி கொடுப்பாள்.
இதையும் படிக்கலாமே: மனம் தெளிவு பெற பச்சரிசி பரிகாரம்
நிச்சயமாக மேல் சொன்ன முறையில் எளிமையான முறையில் வழிபாட்டை மேற்கொண்டாலே வாராஹி உங்களோடு இருப்பதை நீங்கள் உணருவீர்கள். இந்த ஒன்பது நாளும் வீடு சுத்த பத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வீடு மட்டும் அல்ல உங்களுடைய மனசும் சுத்தமாக இருக்கும் வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வராஹியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.