- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

தோஷங்கள் நீங்க, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க இங்கு வழிபடுங்கள்

இறைவனின் சித்தம் இல்லாமல் உலகில் எதுவுமே நடைபெறுவதில்லை. அப்படிப்பட்ட இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டவர்களுக்கு எதைக் குறித்தும் கவலை இருக்காது. அப்படி தான் இறைவனாகக் கருதிய ஸ்ரீராமருக்கு தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து சேவை செய்த இதிகாச நாயகன் தான் ஸ்ரீ ஆஞ்சநேயர். இவருக்கு நாடெங்கிலும் பல கோயில்கள் இருந்தாலும் திண்டுக்கல்லில் இருக்கும் “ஸ்ரீ அபய வரத ஆஞ்சநேயர்” கோயில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. அக்கோயிலின் மேலும் பல வரலாற்று சிறப்புகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

அருள்மிகு அபயவராத ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு

சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இந்த அபயவரத ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான இறைவனான ஆஞ்சநேயர் அபயவரத ஆஞ்சநேயர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் அனுமன் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. தலவிருட்சமாக பலா மரம் இருக்கிறது.

- Advertisement -

முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் ஆஞ்சநேயரின் பக்தனாக இருந்தான். போருக்குச் செல்லும் போது இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு அவர் செல்வார். அவருக்கு இங்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் கோயில் கட்டுவதற்கான சரியான இடம் எது என்பது தெரியாமல் தவித்தார். அந்த மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் இந்த மலைக் கோட்டையை பகுதியை சுட்டிக் காண்பித்து, அங்கு தனக்கு கோயில் கட்டுமாறு கூற, அதன்படி மன்னன் இங்கு கோயில் கட்டி ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, இங்கே பிரதிஷ்டை செய்தார்.

அருள்மிகு அபயவராத ஆஞ்சநேயர் திருக்கோயில் சிறப்புக்கள்

- Advertisement -

திண்டுக்கல்லில் இருக்கும் மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக இந்த ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. கோயிலுக்கு கீழே அனுமான் பெயரில் தீர்த்தம் உள்ளது. ராமாவதாரத்தின் போது பெருமாள் ஆகிய ராமருக்கு சிவபெருமானே ஆஞ்சநேயர் உருவில் அவதரித்து, சேவை செய்தார். இதை உணர்த்தும் விதமாக இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிலையின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை அணிந்து, இடுப்பில் கத்தி செருகிக் கொண்டு போர்க்கோலத்தில் இங்கிருக்கும் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். பொதுவாக ஆஞ்சநேயர் வழிபாட்டிற்குரிய சிறந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிவபெருமானின் அம்சம் என்பதால் வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். தட்சணாமூர்த்தி சிவபெருமானின் ஒரு வடிவம் என்பதாலும் இத்தகைய வழிபாடு செய்யப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி தினத்தன்று கோயிலின் அனுமன் சன்னதியின் முன் மண்டபம் பூக்கள், பழங்கள் மற்றும் வடைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு செய்யப்பட்டு, விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பல ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இங்கே ஜாதகத்தில் கிரக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வேண்டும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இளநீரின் மேற் பகுதியில் ஜாதகரின் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியை குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுகின்றனர். அர்ச்சகர் அந்த இளநீரை அபயவரத ஆஞ்சநேயரின் வாலில் கட்டி விடுகிறார். ஆஞ்சநேயருக்கு வாலில் வலிமை அதிகம். தனது தாயாக கருதும் சீதைக்கு துன்பம் விளைவித்த ஒரு ஊரையே ஆஞ்சநேயர் எரித்தது போல், நமக்கு ஏற்படும் கிரக தோஷங்களையும் தனது வாலால் பொசுக்கி விடுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. தலவிருட்சமான பலா மரத்தின் கீழ் ராமலிங்க சுவாமி காட்சி தருகிறார். பௌர்ணமி மற்றும் பிரதோஷ வேளைகளில் இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இவருக்கு பின்புறம் வேணுகோபால் சந்நிதி இருக்கிறது. ரோகிணி நட்சத்திரத்தன்று இவருக்கு திருமஞ்சனம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

- Advertisement -

ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு அன்று ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்று பெண்கள் கோயில் தீர்த்தக் கரையில் மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்கின்றனர். எத்தகைய செயல்களையும் தொடங்கும் முன்பு இங்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு, அவற்றை தொடங்கினால் அவற்றில் வெற்றி பெற்று மேலான நன்மைகளை பெறலாம் என்பது இங்கு வந்து வழிபட்டு பலனடைந்த பக்தர்களின் அனுபவமாக இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்கு வந்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மற்றும் வடைமாலை சாற்றி வெண்ணை காப்பு செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்ட தலைநகரான திண்டுக்கல் நகரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கிறது. வியாழக்கிழமைகளில் காலை 11 மணி வரையிலும் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம்

தொலைபேசி எண்

9976790768

இதையும் படிக்கலாமே:
குடும்ப பிரச்சனைகள் தீர இங்கு செல்லுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dindigul anjaneyar temple in Tamil. It is also called as Sri abhaya varadha anjaneyar in Tamil or Kariyam vetri pera in Tamil or Dindigul temples in Tamil or Anjaneyar kovil dindigul in Tamil.

- Advertisement -