
சில பேர் பூரிக்கு செய்வது போலவே மசாலாவை செய்து, அதை தோசைக்கு உள்ளே வைத்து மடித்து கொடுத்து விடுவார்கள். ஆனால் அது மசால் தோசைக்கு நிறைவான சுவையை கொடுக்காது. பக்கவான மசால் ரெசிபி எப்படி செய்வது. தோசைக்கு உள்ளே வைத்து சுருட்டி கொடுப்பாங்க இல்லையா. அந்த மசால் ஒரு முறை உங்க வீட்ல இப்படி ட்ரை பண்ணி பாருங்க. ஹோட்டல் சுவையை விட இதன் சுவை சூப்பராக இருக்கும்.
முதலில் இந்த ரெசிபிக்கு மூன்று பெரிய உருளைக்கிழங்குகளை வேகவைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் உருளைக்கிழங்கு உருண்டை உருண்டையாக இருக்கக் கூடாது. 90% உருளைக்கிழங்கை மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், வரமிளகாய் 3, பச்சை மிளகாய் 2, உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, போட்டு பொன்னிறமாக இந்த பருப்புகளை எல்லாம் வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சி துருவல் 1 ஸ்பூன், வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன், போட்டு நன்றாக கலந்து விடுங்கள்.
பிறகு வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் சேர்த்து விட வேண்டும். மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து உருளைக்கிழங்கை தாளிப்போடு நன்றாக தண்ணீர் ஊற்றாமல் கலந்து விடுங்கள். இறுதியாக தேவையான அளவு உப்பு போட்டு, 3 டேபிள் ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு 1 லிருந்து 2 நிமிடம் அடுப்பில் சிம்மில் விட்டால் போதும் சூப்பரான மசாலா தயாராகி இருக்கும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை இதில் தூவி விடுங்கள்.
நமக்கு மசாலா தயாராக உள்ளது. அடுப்பில் ஒரு கடாயை வைத்து தோசை மாவை கல்லில் ஊற்றி மெலிசாக தீட்டிக் கொள்ளுங்கள். தோசைக்கு மேலே ஒரு மூடி போட்டு, தோசையை சிவக்க வைக்க வேண்டும். அதன் பின்பு தோசை ஊற்றி ஒரு நிமிடம் கழித்து தோசை சுற்றிலும் எண்ணெய் வாத்து, தோசைக்கு மேலே இருக்கக் கூடிய மாவு வெந்தவுடன், தயாராக எடுத்து வைத்திருக்கும் மசாலாவை தோசை மேலே வைத்து நன்றாக பரப்பி, தோசையை அப்படியே சுருட்டி மேலே இரண்டு ஸ்பூன் நெய் விட்டுக் கொடுத்துப் பாருங்களேன். வீட்டில் இருப்பவர்கள் யாரும் இந்த தோசையை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அட்டகாசமான சுவை இருக்கும். இதற்கு ஒரு தேங்காய் சட்னி சைட் டிஷ் ஆக இருந்தால் போதும்.
பின்குறிப்பு: இந்த மசாலாவில் நிறைய தண்ணீர் ஊற்றி வெங்காயத்தை உருளைக்கிழங்கை வேக வைக்க கூடாது. நிறைய வெங்காயம் சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்காது. அப்படி வேக வைத்தால் அது பூரிக்கு செய்யக்கூடிய மசாலாவை போல மாறிவிடும். பூரிக்கு செய்யக்கூடிய மசாலா வேறு, தோசைக்கு செய்யக்கூடிய மசாலா வேறு, மேல் சொன்ன குறிப்பை பின்பற்றி மசாலா செய்து பாருங்கள். இதில் சேர்த்து இருக்கும் பருப்பு வகைகளை கடித்து சாப்பிடும்போது தோசை அத்தனை ருசியை கொடுக்கும்.