
இஞ்சியை வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மைகளை கொடுக்க கூடியது ஆகும். அஜீரண கோளாறுகள், சளி, கபம் போன்ற தொந்தரவுகள் எதுவும் நம்மை அண்ட செய்யாது. இஞ்சியை எந்த வகையில் நாம் உணவில் சேர்த்து வந்தாலும் உங்கள் ஆயுளில் நாட்கள் அதிகரிக்கத் துவங்கும் என்பார்கள். இப்படி இஞ்சியை ஊறுகாய் போல இனிப்பாக செய்து வைத்தால் சின்ன சின்ன திகட்டாது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சரி அத்தகைய மகத்துவம் வாய்ந்த மற்றும் சுவை மிகுந்த ‘இஞ்சி இனிப்பு ஊறுகாய்’ எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
‘இஞ்சி இனிப்பு ஊறுகாய்’ செய்ய தேவையான பொருட்கள்:
இஞ்சி – 1/4 கிலோ
புளி – 1 பெரிய எலுமிச்சை அளவிற்கு
பச்சை மிளகாய் – 2
நாட்டு வெல்லம் – 1/2 கப்
மஞ்சள் தூள் – சிட்டிகை அளவிற்கு
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவிற்கு
உப்பு – தேவையான அளவிற்கு
‘இஞ்சி இனிப்பு ஊறுகாய்’ செய்முறை விளக்கம்:
எப்பொழுதும் இஞ்சியை மட்டும் தோலுடன் பயன்படுத்தக் கூடாது. இஞ்சியில் இருக்கும் தோல் பகுதியானது விஷத்தன்மை கொண்டுள்ளது. ஆனால் பூண்டு அப்படியில்லை தோலுடன் சாப்பிட்டாலும் அதிலும் சத்துக்கள் உள்ளன. எனவே இஞ்சியை கால் கிலோ அளவிற்கு வாங்கி நன்கு கழுவி தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். வாணலி சூடேறியதும் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்கள், நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
இஞ்சி வதங்கியதும் தேவையான அளவிற்கு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து விடவும். பின்னர் கெட்டியாக புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். புளிக்கரைசல் கொதித்து பச்சை வாசம் போனதும், எண்ணெய் பிரிந்து வரும். அந்த சமயத்தில் பொடித்து வைத்துள்ள வெல்லத்தை அரை கப் அளவிற்கு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். நீங்கள் கிளறி விடும் பொழுது வெல்லம் உருகி பாகாகி ஊறுகாயுடன் சேர்ந்து கெட்டியாகி பார்ப்பதற்கே சாப்பிட வேண்டும் என்கிற உணர்வை தூண்டும். இதனை அப்படியே நன்கு ஆற விட்டு பயன்படுத்த வேண்டியது தான்.
பாரம்பரிய சமையலில் அசைவம் மற்றும் சைவம் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தப்படும் இந்த இஞ்சி சமையலில் மட்டுமல்லாமல் மருத்துவத்திலும் மிக சிறந்த முறையில் தன் பங்களிப்பை அளித்து வருகிறது. உடலின் நுண்ணிய பாதைகளைத் கூட சுத்திகரிக்கும் சக்தி வாய்ந்த அற்புத மருந்து தான் இந்த இஞ்சி. சுவாச பிரச்சனைகள், மலச்சிக்கல், ஜீரணசக்தி, ரத்த கசிவு ஆகிய பிரச்சனைகளை தீர்க்க கூடியது. நான்காம் நூற்றாண்டில் சீனாவில் காலராவை போக்கவும், ஐந்தாம் நூற்றாண்டில் ஸ்கர்வி நோயை குணமாக்கவும் பயன்பட்டது இந்த இஞ்சி. மகத்துவம் வாய்ந்த இந்த இஞ்சியை எந்த முறையிலாவது தினமும் உங்களுடைய அன்றாட உணவில் ஒரு பங்கு சேர்த்து கொண்டு வாருங்கள் நலமுடன் இருக்கலாம்.