- Advertisement -
சமையல் குறிப்புகள்

காராமணி பன்னீர் கிரேவி செய்முறை

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய ஒரு நோயாக திகழ்கிறது. அதனால் பெரும்பாலானோர் இரவு நேரத்திலோ அல்லது காலைப் பொழுதிலோ சப்பாத்தியை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் சப்பாத்தியை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். அப்படி சப்பாத்தியை உணவாக சேர்த்துக் கொள்ளும் பொழுது அதனுடன் தொட்டுக் கொள்வதற்காக சத்து மிகுந்த கிரேவியை செய்து கொடுத்தோம் என்றால் அதன் பலன் என்னும் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட காராமணி பன்னீர் கிரேவியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

காராமணியில் நார்சத்து அதிகம் இருப்பதால் இது ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை நீக்குகிறது. வயிற்றுப்போக்கை தடுக்கிறது. இதில் ஆன்டிஆக்சைடுகள் அதிகம் இருப்பதால் உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற நச்சுக்களை நீக்குவதோடு புற்றுநோய் வராமலும் பாதுகாக்க உதவுகிறது. இதில் விட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மெக்னீசியம் தூக்கத்தை வரவழைக்க உதவுகிறது. விட்டமின் பி1 இதய ஆரோக்கியத்திற்கு வழிவகைக்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • காராமணி – 1/2 கப்
  • பன்னீர் – 100 கிராம்
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • பட்டை – 1
  • ஏலக்காய் – 2
  • கிராம்பு – 2
  • முந்திரி – 3
  • வெங்காயம் – 1
  • பூண்டு – 6 பல்
  • இஞ்சி – 1 1/2 இன்ச்
  • மல்லி – 2 டேபிள்ஸ்பூன்
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 5
  • தக்காளி – 2
  • உப்பு – தேவையான அளவு
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் காராமணியை சுத்தம் செய்து ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஊறவைத்த தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு ஒரு பிரஷர் குக்கரில் காரமணியை சேர்த்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து இரண்டு விசில் அடுப்பில் வைத்து இறக்கி விட வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, வெங்காயம் இவற்றை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் இஞ்சியும் அதில் சேர்த்து வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு மல்லி, சோம்பு இவை இரண்டையும் சேர்த்து இதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ஒரு நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு தட்டை போட்டு மூடி வைத்து வேக விட வேண்டும்.

- Advertisement -

தக்காளி நன்றாக குழையும் வரை வேக விட வேண்டும். தக்காளி குழைந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இதை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மறுபடியும் அதே கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெயை சேர்க்க வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை அப்படியே அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். மிக்ஸி ஜாரையும் நன்றாக கழுவி அதனுடன் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதிக அளவில் தண்ணீர் ஊற்றாமல் குறைந்த அளவு மட்டும் தண்ணீர் ஊற்றினால் தான் கிரேவி சுவையாக இருக்கும். இந்த கிரேவியுடன் நாம் வேக வைத்திருக்கும் காராமணியின் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

20 நிமிடம் குறைந்த தீயில் கிரேவி அடுப்பில் இருக்கட்டும். இப்பொழுது அந்த கிரேவியில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வர ஆரம்பிக்கும். இந்த நிலையில் நாம் வேக வைத்திருக்கும் காராமணி மற்றும் பன்னீரை இதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். கஸ்தூரி மேத்தி இருப்பவர்கள் இதில் கஸ்தூரி மேத்தியை தூவி விட்டு இறக்கலாம். கஸ்தூரி மேத்தி இல்லாதவர்கள் கொத்தமல்லி தலையை தூவியும் இறக்கலாம். மிகவும் சுவையான ஹோட்டல் சுவையை விட அதிக அளவு சுவை நிறைந்த அதே சமயம் ஆரோக்கிய மிகுந்த காராமணி பன்னீர் கிரேவி தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: மஸ்ரூம் பாயா செய்முறை

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஆரோக்கியமான பொருட்களை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் காராமணி பன்னீரை வைத்து இப்படி கிரேவி செய்து கொடுக்கலாம்.

- Advertisement -