
கிருத்திகை நட்சத்திரம் என்பது முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக திகழ்கிறது. அந்த நட்சத்திரம் வரும் நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த முறை கிருத்திகை நட்சத்திரம் என்பது கார்த்திகை ஒன்றாம் தேதியே வருகிறது. கார்த்திகை மாதமும் முருகனுக்கு உரிய மாதம், அதில் முதல் நாளே கிருத்திகை நட்சத்திரம் வருகிறது என்பது கூடுதல் விசேஷமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட அற்புதமான நாளில் நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு எந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் என்பது இருக்கும். வேலை கிடைக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், சொந்தமாக வீடு வாங்க வேண்டும், வண்டி வாங்க வேண்டும், பிரிந்த தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று பல வேண்டுதல்கள் இருக்கும். இப்படி ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு முறையில் முருகப் பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அந்த முறையை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி நவம்பர் மாதம் 16ஆம் தேதி காலை 7:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள் நல்ல நேரம் என்பது இருக்கிறது. அந்த நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது புதிதாக அகல் விளக்குகளை வாங்கிக் கொள்ளுங்கள். முதல் நாளே அகல் விளக்குகளையும், தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெய், பஞ்சு திரி போன்றவற்றை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் வீட்டிலிருந்து இந்த பொருட்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
எவ்வளவு முயற்சி செய்தும் அந்த வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் மூன்று அகல் விளக்குகளை முருகப்பெருமானின் சன்னதியில் ஏற்றி வைத்து மூன்று முறை அவரை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். திருமணம் நடைபெறவில்லை என்று நினைக்கக்கூடிய பெண் ஒரே ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து முழு மனதோடு முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு 9 முறை வலம் வர வேண்டும். திருமணம் நடக்காத ஆண்கள் 5 அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
திருமணம் நடைபெற்று குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்கள் தம்பதிகளாக முருகன் சந்நிதிக்கு சென்று மூன்று அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஆறு முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். கணவன் மனைவி பிரிந்து இருக்கிறார்கள் மனைவி கணவனுடன் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்னும் பட்சத்தில் மனைவி முருகனின் சன்னிதானத்தில் இரண்டு அகல் விளக்கை ஏற்றி வைத்து இரண்டு முறை முருகப்பெருமானை வலம் வந்து 101 ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.
மனைவியை பிரிந்த கணவன் மனைவி தன்னுடன் வந்து சேர வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் குழந்தைகள் இருந்தால் மூன்று விளக்கு குழந்தைகள் இல்லையென்றால் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து ஐந்து முறை முருகப்பெருமானின் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். புதிதாக வீடு, வண்டி, வாகனம் என்று பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மூன்று அகல் விளக்குகளை ஏற்றி வைத்து “ஓம் நமோ சரவணபவ” என்னும் மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து மூன்று முறை முருகப்பெருமானை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது எந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று தீபம் ஏற்றினோமோ அந்த கோரிக்கையை மட்டும் தான் முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வேறு எதுவும் வேண்ட கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாடுகளை செய்து முடித்த பிறகு நேராக வீட்டிற்கு வந்து வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். பிறகுதான் மற்ற வேலைகளை செய்ய வேண்டும். திரும்பி வரும் பொழுது கடைக்கு மற்றவர்களின் வீட்டிற்கு, வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:அற்புத யோகம் தரும் கார்த்திகை ஒன்று
முழு மனதுடன் முருகப்பெருமானை நம்பி நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்றார் போல் கிருத்திகை நட்சத்திர நாளில் இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் அவர்கள் விரும்பியது கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.