- Advertisement -

குபேர வாழ்க்கை அருளும் தை குபேர கிருத்திகை

- Advertisement -

எல்லா மாதமும் கிருத்திகை நட்சத்திரம் வரும் என்றாலும் தை கிருத்திகைக்கு என்று சிறப்பு அதிகமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த வருடம் வரக்கூடிய தை கிருத்திகை என்பது கூடுதல் சிறப்பை தரக்கூடியதாக திகழ்கிறது. இந்த வருடம் தை கிருத்திகை என்பது பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி தை மாதத்தின் 24ஆம் தேதி வருகிறது. முருகப்பெருமானுக்கு உகந்த எண்ணாக ஆறு திகழ்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆங்கில தேதியின்படி ஆறாம் தேதி தை கிருத்திகை வருகிறது. தமிழ் மாதத்தில் 24ஆம் தேதி வருகிறது. இதன் கூட்டுத் தொகையும் ஆறுதான். அனைத்தும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய இந்த தை கிருத்திகை நாளன்று குபேர வாழ்க்கை வாழ்வதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தை குபேர கிருத்திகை

முருகப்பெருமானை குருவாகவும் நாம் வழிபாடு செய்வோம். அதற்கு சான்று தான் குரு ஸ்தலமாக திகழக்கூடிய திருச்செந்தூர். மேலும் சிவபெருமானுக்கு குருவாக இருந்து உபதேசித்தவர் தான் முருகப்பெருமான் என்பதற்கு சான்றாக சுவாமி மலையும் திகழ்கிறது. அதனால் முருகப் பெருமானை நாம் குருவாக வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட குருவிற்கு உகந்த கிழமையான வியாழக்கிழமையோடு தை கிருத்திகை வருகிறது என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு தான். அந்த வியாழக்கிழமை குபேரருக்குரிய கிழமை என்பதால் அன்றைய தினத்தில் நாம் முருகப் பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்ய குபேர வாழ்க்கை உண்டாக்கும்.

- Advertisement -

இதற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முருகப்பெருமானை வழிபாடு செய்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். மாலை 6 மணிக்கு இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இதற்கு முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்காக ஆறு நிறங்களில் இருக்கக்கூடிய மலர்களை வாங்கிக் கொள்ளுங்கள். அதேபோல் ஆறு விதமான நெய்வேத்தியங்களையும் தயார் செய்து கொள்ள வேண்டும். நம் வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களை பயன்படுத்திக் கூட ஆறு விதமான நெய்வேத்தியங்களை நாம் தயார் செய்து கொள்ளலாம். அடுத்ததாக முருகப் பெருமானுக்கு முன்பாக நட்சத்திர கோலம் வரைந்து அதில் ஆறு மா விளக்குகளை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அன்றைய தினம் சண்முக கவசத்தை பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு. சண்முகா அர்ச்சனை என்று கூறக்கூடிய அர்ச்சனையை இந்த ஆறு மலர்களை வைத்து முருகப்பெருமானுக்கு நாம் செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்து விட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்பவர்களுடைய வாழ்க்கையில் முருகப்பெருமானின் அருளால் பலவிதமான முன்னேற்றங்கள் உண்டாகும். மேலும் நாம் வைக்கும் வேண்டுதல்களும் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே:நன்மைகள் தேடி வர ஏற்ற வேண்டிய தீபம்
அதி சக்தி வாய்ந்த இந்த வருட தைக்கிருத்திகை நாளன்று இந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்து பாருங்கள். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -