
எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் மனநிம்மதியுடன் இரவு உறங்குகிறாரா என்று கேட்டால் பலரும் இல்லை என்று தான் கூறுவார்கள். அதே போல் தான் குடிசை வீட்டில் இருப்பவர் நிம்மதியாக உறங்குகிறாரா என்று கேட்டால் நூற்றுக்கு 90 சதவீதம் நிம்மதியான உறக்கம் என்பது இருக்காது. இதற்கு வருமானம் அதிகரிப்பது காரணம் என்று நினைக்கக் கூடாது. அந்த வருமானத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் மேலும் வருமானத்தை உயர்த்த வேண்டும், இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று மனதிற்குள் போட்டு குழப்பிக் கொண்டு இருப்பதுதான் அதற்கு முக்கியமான காரணமாக திகழ்கிறது. மேலும் மன நிம்மதியை இழந்து வாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தினமும் தங்களுடைய வீட்டு பூஜை அறையில் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தெய்வ வழிபாடு என்பது நமக்கு மனநிறைவை தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. ஆலயத்திற்கு சென்று நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் உள்வாங்கப்படுகிறது. அதனால் தான் தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட தெய்வ வழிபாட்டை எந்த முறையில் செய்தால் நம்முடைய மன உளைச்சல் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்று தெரிந்து கொள்வோம்.
ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெல்லை பரப்பி அதற்கு மேல் இரண்டு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இந்த நெல்லை மாற்ற வேண்டும். பழைய நெல்லை எடுத்து பறவைகளுக்கும், கிளிகளுக்கும், குருவிகளுக்கும் தானமாக தந்து விட வேண்டும்.
மேலும் தினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் பாடல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும். மாலை நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்க செய்ய வேண்டும். தினமும் ஸ்ரீராமஜெயம் எழுதி வந்தாலும் மன சஞ்சலங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது குலதெய்வத்திற்கென்று தனியாக ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.
இதே போல் வெள்ளிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கு குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்வதும் மன சஞ்சலத்தையும், மனக்கவலையையும் நீக்குவதற்குரிய வழிகளாகும். இந்த வழிகளை முறையாக தொடர்ச்சியாக பின்பற்றுபவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை அமையும்.
இதையும் படிக்கலாமே:சம்பாரித்த பணமும் பொருளும் நிலைத்திருக்க
இந்த எளிமையான வழிமுறைகளை தினமும் பின்பற்றுபவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய மனக்கவலைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.