
நம்முடைய இந்து தர்மத்தின் படி பலவிதமான தெய்வங்களை பலவிதமான வழிமுறைகளில் வீட்டிலேயே வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அப்படி வழிபாடு செய்வதற்குரிய மிகவும் சிறப்பு மிகுந்த நாட்களில் ஒன்றாக தான் நவராத்திரி நாட்கள் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களுடைய வீட்டில் கொலு பொம்மைகளை வைத்து கலசம் வைத்து முப்பெரும் தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி போன்றோரை வழிபாடு செய்து அவர்களை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் தருவது போல வழக்கங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளில் நாம் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், பயம் முற்றிலும் விலகும். மகாலட்சுமியை வழிபாடு செய்வதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும், தரித்திரம் முற்றிலும் நீங்கும். சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதன் மூலம் மடமை முற்றிலும் நீங்கி ஞானம் பெற்று சிறந்த கல்வி திறனையும் பெற முடியும். இவர்கள் மூவரின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்தான் இந்த உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறப்படுகிறார்கள். அவர்களுக்குரிய இந்த நவராத்திரி நாட்களில் ஏதாவது ஒரு நாள் மட்டும் இந்த ஒரு தீப வழிபாட்டை செய்ய வேண்டும்.
2025 ஆம் ஆண்டு நவராத்திரி என்பது செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி திங்கட்கிழமை ஆரம்பித்து அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நிறைவடைகிறது. இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்பொழுது சகல விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும். அனைத்து நாட்களிலும் தீபம் ஏற்ற இயலவில்லை என்றால் கூட ஒரே ஒரு நாள் மட்டும் நவராத்திரி முடிவதற்குள் நாம் இந்த தீபத்தை ஏற்று வழிபாடு செய்தால் முப்பெரும் தேவியரின் அருளை நம்மால் பெற்று விட முடியும். அந்த தீபம்தான் எலுமிச்சை தீபம்.
பொதுவாக எலுமிச்சை தீபத்தை வீட்டில் போடக்கூடாது ஆலயத்தில் தான் போட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த நவராத்திரி சமயத்தில் ஆலயத்தில் இருக்கக்கூடிய தெய்வத்தை நாம் வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்வதால் நவராத்திரி நிறைவடைவதற்குள் வீட்டிலேயே இந்த எலுமிச்சை தீபத்தை போட வேண்டும். ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை இரண்டாக நறுக்கி சாறை பிழிந்து விட்டு அந்த எலுமிச்சம்பழத் தோலை திருப்பி போட்டு அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. இவ்வாறு ஏற்றி வைத்த பிறகு நமக்கு தெரிந்த அம்மனின் மந்திரங்களையோ, பாடல்களையோ, நாமங்களையோ கூறி வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரம் ஆவது எரிய வேண்டும். இந்த தீபத்தை தினமும் ஏற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் முதல் நாள் ஏற்றிய எலுமிச்சம் பழங்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக எலுமிச்சம் பழத்தை எடுத்து தீபம் போட வேண்டும். இந்த தீபத்தை போட்டு வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் அருளை பெற முடியும். அதன் மூலம் நம் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளங்களைத் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு
இந்த தீபத்தை நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஏற்றி வழிபாடு செய்யலாம். இயலாதவர்கள் நவராத்திரியில் ஒரே ஒரு நாள் மட்டும் ஏற்றி வழிபாடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.