நவராத்திரியின் ஒவ்வொரு நாட்களிலும் அம்மனை ஒவ்வொரு விதமான அம்மனாக பாவித்து வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கிறது. இந்த வழக்கத்தை பலரும் பல விதங்களில் பின்பற்றுவார்கள். மிகவும் எளிமையான முறையில் கொலு வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி, கலசம் வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி, அகண்ட தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது அம்மனின் படத்தை வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது இவை எதுவுமே செய்யவில்லை சாதாரணமாக தீபம் ஏற்றி வழிபாடு செய்யப் போகிறோம் என்பவர்களாக இருந்தாலும் சரி இந்த வழிமுறையை பின்பற்றும் பொழுது நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாட்டிற்குரிய முழு பலனை பெற முடியும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு
நவராத்திரியின் இரண்டாம் நாள் நாம் அம்மனை ராஜராஜேஸ்வரி ஆகவும், கௌமாரி தாயாகவும் பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் நவ துர்க்கைகளில் பிரம்மச்சாரிணி துர்க்கையை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவர்களை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய குடும்ப முன்னேற்றத்திற்காக நியாயமான விதத்தில் எந்த முயற்சியை எடுத்தாலும் அந்த முயற்சியில் வெற்றி உண்டாகும். காரிய சித்தி ஏற்படும். மேலும் நமக்கும் நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் ஆரோக்கியம் மேம்படும்.
இந்த வழிபாட்டை செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மாலை 5:45 மணியிலிருந்து 9:45 மணிக்குள் செய்ய வேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம். இன்றைய தினத்தில் நாம் அம்மனை அலங்காரம் செய்வதற்கு மஞ்சள் நிற துணியை பயன்படுத்துவது என்பது மிகவும் சிறப்பு. அதே போல் வீட்டிற்கு வந்து சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் நிற துணியை தாம்பாளத்துடன் வைத்து தருவது நல்லது. அதேபோல் அம்மனுக்கு நெய்வேத்தியமாக வைக்கக்கூடிய பழ வகைகளில் மாம்பழம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதோடு சேர்த்து புளி சாதம், லட்டு, கருப்பு கொண்டை கடலை சுண்டல் போன்றவற்றையும் நெய்வேத்தியமாக வைக்கலாம். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதற்கும் அலங்காரம் செய்வதற்கும் முல்லைப்பூ, துளசி, மருவு போன்றவற்றை பயன்படுத்திக் கொள்வது மிகவும் சிறப்பு. அன்றைய தினம் ஐந்து தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த தீபங்கள் நல்லெண்ணெய் தீபமாகவும் இருக்கலாம் நெய் தீபமாகவும் இருக்கலாம். இந்த தீபங்கள் வடக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும்.
ராஜராஜேஸ்வரி அம்மனாக பாவித்து “ஓம் நமோ ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே நமஹ” என்னும் மந்திரத்தை 111 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அதேபோல் நவ துர்க்கைகளில் ஒருவராக திகழக்கூடிய பிரம்மச்சாரிணியை “ஓம் தேவி பிரம்மச்சாரிணியை நம” என்னும் மந்திரத்தை கூறி 48 முறை அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களுக்கு தாம்பூல செட்டை கொடுத்து ஆசீர்வாதத்தை பெற்று வழி அனுப்ப வேண்டும்.
இதையும் படிக்கலாமே: சொந்தமாக நிலம் வீடு வாங்க வழிபாடு
நவராத்திரியின் இரண்டாம் நாள் மிகவும் எளிமையான முறையில் ராஜராஜேஸ்வரி தாயை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.