
நம்மில் நிறைய பேர் தீரா கஷ்டம் வரும்போது, இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். கஷ்டங்கள் சரியாகி விட்டால், கோவிலுக்கு பொங்க வைப்பதாக, அல்லது படியேறி வருவதாக, ஏதாவது பிரார்த்தனை செய்து கொள்வோம். ஆனால் நம்முடைய துன்பம் தீர்ந்த பிறகு, பிரச்சனைகள் முடிந்த பிறகு, சந்தோஷத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்ட நேர்த்திக்கடனை மறந்து விடுவோம். இது நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நாள், தக்க சமயத்தில் தடங்களை உண்டு பண்ணி விடும்.
அப்போதுதான் நம்முடைய நினைவுக்கு வரும் இறைவனுக்கு செய்த நேரத்தி கடனை மறந்து விட்டோமே என்று. சில பேருக்கு அப்போதும் ஞாபகம் வராது. இப்படிப்பட்ட நிறைவேற்றப்படாத வேண்டுதலின் மூலம் நம்முடைய குடும்பத்திற்கு ஏதேனும் பெரிய பிரச்சனைகள் வருமா. நம்முடைய முன்னோர்கள் ஏதாவது நேர்த்தி கடன் செய்து விட்டு மறந்து விட்டால், அது அடுத்த தலைமுறைக்கு பாதிப்பை கொடுக்குமா. இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் தான் என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
சக மனிதர்களிடமே சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் தவறிவிட்டால், அந்த இடத்தில் நமக்கு ஒரு மரியாதை இருக்காது. அப்போது இறைவனிடம் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாவிட்டால், நிச்சயம் அந்த இடத்தில் ஏதாவது பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இறைவனிடம் வைத்த நேர்த்தி கடனை நிறைவேற்றி தான் ஆக வேண்டும்.
அதேபோல சில பேர் வீட்டில் மஞ்சள் துணியில், ஒரு ரூபாய் நாணயத்தை, முடிந்து முடிந்து வைத்து விடுவார்கள். எந்த சாமிக்கு எந்த வேண்டுதலை வைத்தோம் என்று அவர்களுக்கே தெரியாது. இதுபோல எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, நீங்கள் பஞ்சபூத ஸ்தலங்களில் இருந்து ஒரு தளத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் பஞ்சபூத ஸ்தலங்கள் ஐந்து உண்டு.
அந்த கோவிலுக்கு சென்று ஒரு கைப்பிடி காசை மஞ்சள் துணியில் வைத்து முடிந்து, உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய முன்னோர்களோ அல்லது நாங்களோ குலதெய்வத்திற்கோ அல்லது மற்ற தெய்வங்களுக்கோ ஏதேனும் பிரார்த்தனை செய்து, அதை நிறைவேற்றாமல் விட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என்று சொல்லுங்கள்.
கையில் வைத்திருக்கும் பிடி காசு முடிச்சை அந்த பஞ்சபூத ஸ்தலங்களில் ஏதாவது ஒரு கோவிலில் செலுத்தி விட வேண்டும். பிடிக்காசு செலுத்துவது என்று சொல்லுவார்கள். இறைவனிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு இந்த பிடி காசை, அந்த பஞ்சபூத ஸ்தலங்களில் ஏதாவது ஒரு கோவிலில் செலுத்தி விட்டால் போதும். உங்களுக்கான மன்னிப்பு வழங்கப்படும்.
ஒரு ரூபாய் முடிச்சு வீட்டில் இருந்தால் அதையெல்லாம் சேகரித்துக் கொண்டு போய் அந்த கோவிலிலேயே செலுத்தலாம். உலகமே இந்த பஞ்சபூதங்களின் மூலமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே தான் இந்த கோவில்களை நம்முடைய முன்னோர்கள் நமக்கு பரிந்துரை செய்துள்ளார்கள். பஞ்சபூத ஸ்தலங்கள் என்றால் எந்தெந்த கோவில்கள்.
இதையும் படிக்கலாமே: தை மாத ஞாயிற்றுக்கிழமை அம்பாள் வழிபாடு
திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம், காளஹஸ்தி, சிதம்பரம் இந்த ஐந்து இடத்தில் இருக்கும் சிவன் கோவில்கள் தான் பஞ்ச பூத ஸ்தலங்கள். உங்கள் ஊருக்கு பக்கத்தில் இதில் எந்த கோவில் இருக்கிறது, அந்த கோவிலுக்கு சென்று இந்த பிடி காசு வேண்டுதலை நிறைவேற்றி விடுங்கள். நீங்களே, உங்களுக்கே தெரியாமல் நூறு வேண்டுதல் வைத்திருக்கலாம். அந்த வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றிய புண்ணியம் உங்களை வந்து சேரும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு மேல் சொன்ன பரிகாரம் நல்ல பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.