
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்தில் ஒரு முக்கியமான காரியம் நடைபெற்றால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நினைப்போம். அந்த காரியம் நடப்பதற்காக பல விதங்களில் நாம் முயற்சியும் செய்வோம். இருப்பினும் ஒரு சிலருக்கு ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாகவோ ஏதோ ஒரு தடைகளால் அந்த காரியம் நடக்காமல் போய்விடும். அப்படி நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய நியாயமான காரியம் சரியான நேரத்தில் நல்ல விதத்தில் நடந்திட சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய அபிஷேகத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தான் பார்க்க போகிறோம்.
முப்பெரும் தேவர்களுள் ஒருவராக திகழக் கூடியவர் சிவபெருமான் என்றும் நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நமக்கு நற்கதியை தரக்கூடியவர் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். எப்பேர்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலையில் விடாப்பிடியாக சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அந்த சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி நற்கதியை அருள்வார் என்றும் பலரும் கூறி கேள்விப்பட்டிருப்போம். மற்ற பிற தெய்வங்கள் சிவபெருமானை நினைத்து தவமிருந்து தங்களுக்கு வேண்டிய வரத்தை பெற்றதாக புராணங்களும் கூறுகின்றன. அப்படிப்பட்ட சிவபெருமானை எந்த முறையில் வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திதி வருவது போல ஒவ்வொரு விதமான நட்சத்திரங்களும் வரும். அந்த நட்சத்திரங்களுக்கு ஏற்றார் போல் நாம் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அந்த நட்சத்திரங்களில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நட்சத்திரம் என்று இருக்கிறது. அப்படி பார்க்கும்பொழுது சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக திருவாதிரை நட்சத்திரம் திகழ்கிறது. இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் தான் சிவபெருமான் பலவிதமான திருவிளையாடல்களைப் புரிந்து தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிந்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
அப்படிப்பட்ட திருவாதிரை நட்சத்திர நாளில் நாவற்பழத்தின் சாறை நாமே நம் கை பட தயார் செய்து அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக தரவேண்டும். அப்படி தருவதோடு மட்டுமல்லாமல் நம் கண் குளிர அந்த அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். இவ்வாறு தரிசனம் செய்து முடித்த பிறகு நம்முடைய பெயரில் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்ற சங்கல்பத்தையும் முன்வைக்க வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளால் நாம் நினைத்த நல்ல காரியம் நல்ல விதத்தில் நடந்திரும்.
மேலும் சிவபெருமானை சுற்றி வரும் பொழுது சிவபெருமானுக்கு இடப்புறத்தில் இருக்கக்கூடிய சண்டிகேஸ்வரர் சன்னிதியில் நெய் தீபத்தை ஏற்றி வைத்து சன்னதியில் அமைதியாக அமர்ந்து “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை மனதிற்குள் 108 முறை கூறி பிறகு நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலையும் முன்வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் விரைவில் சிவபெருமானின் அருளால் அந்த காரியம் நடந்தேறும்.
இதையும் படிக்கலாமே: சர்வ மங்களம் உண்டாக கந்தசஷ்டி ஏழாம் நாள் வழிபாடு
அனைத்து விதமான செல்வங்களையும் தங்கு தடை இன்றி கேட்கும் பக்தர்களுக்கு வாரி வழங்கக் கூடிய சிவபெருமானை இந்த நாளில் சென்று வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.