
எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம். குக்கரில் மிக மிக சுலபமான முறையில் கொத்தமல்லி சாதம் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி சாதத்தை இப்படி செய்து கொடுத்தால், வீட்டில் இருப்பவர்கள் யாரும் வேணாம் என்று நிச்சயம் சொல்ல மாட்டாங்க. வாங்க, சூப்பரான இன்ட்ரஸ்டிங்கான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்ளுவோம்.
முதலில் 1 கப் அளவு அரிசியை தண்ணீரில் போட்டு ஊறவைக்க வேண்டும். பாசுமதி அரிசி, பச்சரிசி, சாப்பாட்டு அரிசி, எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. 200 கிராம் அளவு அரிசிக்கு கீழே சொல்லப்படும் அளவுகள் சரியானதாக இருக்கும். ஊறவைக்கும் நேரம் என்பது 10 லிருந்து 15 நிமிடங்கள் எடுத்துக்கொண்டால் போதும்.
அதன் பின்பு மீடியம் சைஸில் இருக்கும் 1 கட்டு கொத்தமல்லித் தழையை வேரை மட்டும் நீக்கி விட்டு, காம்புகளோடு கொஞ்சம் பொடியாக நறுக்கி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – 1 சிறிய துண்டு, தோல் உரித்த பூண்டு பல் – 6, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளவேண்டும். சாதத்தை தாளித்து விடலாம். 4 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் – சோம்பு 1/2 ஸ்பூன், பட்டை – 1 துண்டு, லவங்கம் – 2, ஏலக்காய் – 1, பிரியாணி இலை – 1, முந்திரி பருப்பு – 10, வேர்க்கடலை – 2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
தாளித்த பொருட்கள் எல்லாம் சிவந்து வந்த பிறகு, நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 1, சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் பச்சை வாடை நீங்கும் அளவிற்கு வதக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதை குக்கரில் போட்டு நன்றாக வதக்கவேண்டும். இஞ்சி பூண்டை எல்லாம் பச்சையாக தான் அரைத்து இருக்கின்றோம் அல்லவா? அந்த பச்சை வாசனை அனைத்தும் இந்த எண்ணெயோடு வதங்கிவிட வேண்டும்.
அடுத்தபடியாக தேவையான அளவு தண்ணீரை ஊற்றவேண்டும். 1 கப் பாஸ்மதி அரிசி ஆக இருந்தால், 1 1/2 கப் அளவு தண்ணீர் சரியான அளவாக இருக்கும். மற்ற அரிசிகளாக இருந்தால் 1 கப் அரிசிக்கு, 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து, சாதம் தளதளவென கொதி வந்ததும், அதன் பிறகு குக்கரை மூடி விசில் போட்டு உங்கள் வீட்டில் அரிசி எத்தனை விசில் விட்டால் வேகுமோ, அத்தனை விசில் வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து பாருங்கள். இதன் வாசம் அப்படி இருக்கும். பசியை தூண்டும். நாவிற்கு அத்தனை ருசியை கொடுக்கக்கூடிய ரெசிபி இது. உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ரெசிபி இது. மிஸ் பண்ணாம செய்யுங்க. டேஸ்ட் பண்ணி பாருங்க. என்ஜாய் பண்ணுங்க.