
சமையல் எளிமையாகவும் அதே நேரம் சுவையாகவும் இருக்க வேண்டுமென்று தான் அனைவரும் விரும்புவார்கள். அதற்கு ஏற்றார்போல் சுவையாகவும், சீக்கிரமாகவும் செய்யக்கூடிய குழம்பு ஒன்று உள்ளது. அது என்னவென்று தெரியுமா? செட்டிநாட்டு விருந்துளில் பெரும்பாலும் இந்த குழம்பு இல்லாமல் இருக்காது. அனைத்துப் பொருட்களையும் கூட்டி அவித்தாலே இந்த குழம்பு தயாராகிவிடும். பரங்கிக்காய் வைத்து செய்யும் இந்த குழம்பினை எப்படி செய்வது என்பதனை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் – 250 கிராம், சின்னவெங்காயம் – 15, தக்காளி – 1, பூண்டு – 5 பல், புளி – ஒரு எலுமிச்சைப் பழம் அளவு, மிளகாய் தூள் – 3 ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, வெல்லம் – சிறிய துண்டு.
செய்முறை:
முதலில் பரங்கிக்காயை சுத்தம் செய்து கழுவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பூண்டினையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். புளியை முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பரங்கிக்காய் வெங்காயம் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், சேர்த்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். சிறிது நேரத்திலேயே பரங்கிக்காய் நன்றாக வெந்துவிடும். அப்பொழுது கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் சுண்டும் வரை இந்த கலவையை நன்றாக சிறிய தீயில் கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் வற்றி சிறிது கெட்டியானதும் பாத்திரத்தை இறக்கி வைக்கவேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் சோம்பு, சீரகம், வெந்தயம் சேர்த்துத் தாளித்து அதனுடன் இரண்டு கொத்து கறி வேப்பிலை இலைகளையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதன்பின் தாளித்தவற்றை பரங்கிக்காய் கலவையுடன் சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்துவிட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி விடவேண்டும்.
பிறகு இதனை சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடும் பொழுது கரும்பின் சுவையே விடவும் மிகுதியான சுவையில் இருக்கும். நீங்கள் ஒரு முறை சாப்பிட்ட பிறகும் இதன் சுவை மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். செட்டிநாட்டு விசேஷங்களில் இந்த குழம்பு முக்கிய இடத்தில் உள்ளது. நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் சமைத்து பாருங்கள். இதன் சுவையில் இதனை மீண்டும் மீண்டும் சமைத்துக் கொண்டே இருப்பீர்கள்.
பயன்கள்: பரங்கிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் சூட்டை தணிக்கிறது. வாயு பிரச்சனை ஜீரண பிரச்சனை நல்ல தீர்வாக இருக்கும். பரங்கிக்காய் சிறிது நேரத்திலேயே வெந்து விடும் என்பதால் இதனை சமைப்பதற்கு அதிக நேரம் செலவிட தேவை இருக்காது.