
சுவைகள் ஆறு வகைப்படும். இந்த ஆறு சுவைகளும் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளையும் தரக்கூடியது. அதனால்தான் அன்றைய காலத்தில் அறுசுவை விருந்து என்று கூறுவார்கள். ஆனால் இப்பொழுது இந்த அறுசுவைகளில் துவர்ப்பையும் கசப்பையும் யாரும் பெரிதாக உண்பது கிடையாது. அதிலும் குறிப்பாக கசப்பு சுவை மிக்க பாகற்காயை பார்த்தாலே பிடிக்காது என்று ஒதுக்கி வைக்கும் சூழ்நிலை உண்டாகி விட்டது. அப்படிப்பட்ட பாகற்காயை வைத்து எப்படி வடை செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
பாகற்காயில் இருக்கும் கசப்புத் தன்மையால் வயிற்றில் இருக்கக்கூடிய புழுக்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. மேலும் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு குறைகிறது. அது மட்டுமல்லாமல் விட்டமின் பி1, பி2, பி3, பாஸ்பரஸ், மக்னீசியம், நார்ச்சத்து போன்ற உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
முதலில் கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பாகற்காயை இரண்டாக நறுக்கி அதற்கு நடுவில் இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு கேரட் துருவுவது போல் உரசி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மிக்ஸி ஜாரில் 20 நிமிடம் ஊற வைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் சேர்த்து அதனுடன் சோம்பு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கருவேப்பிலை சின்ன வெங்காயம் இவை அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் கடலை மாவு, மைதா மாவு, பச்சரிசி மாவு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், துருவி வைத்திருக்கும் பாகற்காய், தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். மாவை அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்கக்கூடாது. அதேபோல் பிணையும் பொழுதும் தண்ணீர் சேர்க்கக்கூடாது. இவ்வாறு நன்றாக பிணைந்த பிறகு இதை வடை அளவிற்கு தட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பின் ஒரு கடாயை வைத்து வடையை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு நாம் தட்டி வைத்திருக்கும் வடையை அதில் சேர்த்து பொன்னிறமாக சிவக்கும் வரை விட்டு எடுத்து பரிமாற வேண்டும். கசப்பே தெரியாத பாகற்காய் வடை தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: பச்சைப்பயிறு இட்லியும் அதுக்கு ஏற்றார் போல் இஞ்சி சட்னியும்
ஏதாவது ஒரு ரூபத்தில் அனைத்து விதமான சுவைகளையும் உட்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் பாகற்காயை வைத்து இப்படி வடை செய்து தரலாம்.