
சில ரோட்டு கடைகளில் இட்லி தோசைக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான பிளைன் சால்னா கிடைக்கும். பார்ப்பதற்கு கொஞ்சம் பச்சை நிறமாக தான் இருக்கும். ஆனால் அதில் காரம் தூக்கலாக வாசம் தூக்கலாக சாப்பிடவே ஒரு தனி ருசி இருக்கும். இப்படிப்பட்ட குருமாவை நம்முடைய வீட்டில் முயற்சி செய்து பார்த்தால், குருமா வரும். ஆனால், ஏதோ ஒரு சுவையில் கிடைக்கும். அச்சு அசலாக ரோட்டு கடை குருமாவை சுலபமாக செய்வது எப்படி என்பதை பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
முதலில் இந்த குருமா செய்ய ஒரு ஸ்பெஷல் அரவையை அரைக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஏலக்காய் – 1, பட்டை – 1, கிராம்பு – 2, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, சோம்பு – 1 ஸ்பூன், கசகசா – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 7, இஞ்சி – 1 இஞ்ச், பூண்டு – 8 பல், இந்த பொருட்களை எல்லாம் போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, சேர்த்து தக்காளி பழத்தின் தோல் சுருங்கி வரும் வரை நன்றாக வதக்கி விட்டு, தேங்காய் – 1/2 மூடி, புதினா கொத்தமல்லி தழை சேர்த்து – 1 கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை – 1 ஸ்பூன் போட்டு இந்த எல்லா பொருட்களையும் மீண்டும் ஒருமுறை இரண்டு நிமிடம் போல வதக்கி விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த விழுது நன்றாக ஆரிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது குருமாவை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 1 சிறிய துண்டு கல்பாசி, நீலவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 1, சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதங்கட்டும். அதன் பின்பு மீடியம் சைஸில் இருக்கும் ஒரு தக்காளி பழத்தை வெட்டி போட்டு வதக்குங்கள். ஒரு கொத்து கருவாப்பிலையை போட்டுக் கொள்ளுங்கள்.
தக்காளி நன்றாக வதங்கி வந்ததும் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு கொதி விடுங்கள். இந்த குருமா கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு குருமாவை 10 நிமிடங்கள் போல கொதிக்க வைக்க வேண்டும். (இந்த குருமாவில் மிளகாய்த்தூள் போடக்கூடாது. வெறும் பச்சை மிளகாய் காரம் தான்.)
இறுதியாக 1/2 குழி கரண்டி அளவு இட்லி மாவு அல்லது தோசை மாவு எடுத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து அந்த மாவை, குருமாவில் ஊற்றி நன்றாக கலந்து மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து பொடியாக வெட்டிய கொத்தமல்லி தழைகளை தூவி அப்படியே கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள். சுட சுட இட்லிக்கு மேலே இந்த குருமாவை ஊற்றி சாப்பிட்டால், சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊறுது. நான்கு இட்லி அதிகமாக தான் உள்ளே இறங்கும். நீங்க வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க.