
தினமும் காலையில் என்ன சமைப்பது என்ற குழப்பம். ஒரு நாள் இட்லி தோசையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, சூப்பரான இந்த ரவை அவல் பால் ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க. இதை காலை உணவாக சாப்பிடுவதற்கு, அரிசி சேர்க்காத சத்து நிறைந்த உணவாகவும் இருக்கும். அதே சமயம் குழந்தைகள் விருப்பப்பட்டு சாப்பிடக்கூடிய உணவாகவும் இருக்கும். இதன் சுவை பொடி இட்லி போல இருந்தாலும், இந்த ரெசிபி செய்ய இட்லி மாவு தேவையில்லை. வாங்க சூப்பரான இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஒரு அகலமான பவுல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 கப் அவல் சேர்த்து, அந்த அவலை தண்ணீர் ஊற்றி ஒரு முறை அலசி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி ஐந்து நிமிடம் மட்டும் அந்த அவலை ஊற வைத்து, தண்ணீர் முழுவதையும் வடிகட்டி விட்டு, அவலை உங்கள் கையாலேயே நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்த அவலுடன் 1 கப் அளவு ரவை போட்டு, 1 கப் அளவு கொதிக்க கொதிக்க தண்ணீரை அதில் ஊற்றி, நன்றாக கலந்து ஐந்து நிமிடம் மூடி போட்டு ஊற வைத்து விடுங்கள். (அவல், தண்ணீர், ரவை, மூன்றையும் ஒரே கப்பில் அளந்துக்கோங்க.)
தண்ணீர் எல்லாம் உறிஞ்சி மாவு ஓரளவுக்கு செட்டாகி வந்திருக்கும். அந்த மாவோடு சீரகம் 1 ஸ்பூன், இஞ்சி துருவல் 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். (இந்த மாவு ரொம்பவும் கட்டியாகவும் இருக்கக் கூடாது. ரொம்பவும் தளதளவெனவும் இருக்கக் கூடாது. சாப்டான மாவாக தயார் செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் இந்த உருண்டைகள் சாஃப்டாக நமக்கு வெந்து கிடைக்கும்.)
அடுப்பில் ஒரு இட்லி பானையை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, இட்லி தட்டை வைத்து எண்ணெய் தடவி, இந்த உருண்டைகளை ஆவியில் ஐந்து நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியே சாப்பிடாதீங்க நல்லாவே இருக்காது.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய், கடுகு, கருவாப்பிலை, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தாளித்து, அதில் இந்த ஆவியில் வேக வைத்த உருண்டைகளைப் போட்டு மேலே இட்லி பொடி தூவி அப்படியே பிரட்டி நன்றாக ஃப்ரை செய்து சாப்பிட்டு பாருங்கள். அம்புட்டு ருசியா இருக்கும். ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.
இதற்கு தொட்டுக்கொள்ள கூட எதுவுமே தேவை கிடையாது. வெறும் பொடியிலேயே மணக்க மணக்க இருக்கும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய் கூட இறுதியாக இதில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் ஒரு டூத் பிக்கை சொருகி குழந்தைகளிடம் கொடுத்து விட்டால் லாலிபாப் போல ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடுவாங்க.