
உருளைக்கிழங்கை வைத்து மிக மிக சுலபமான முறையில் ஒரு சைடிஷ் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சப்பாத்தி, ரொட்டி நாண் இவைகளுக்கு இந்த கிரேவி பர்ஃபெக்டான சைடிஷ். உங்க வீட்ல உருளைக்கிழங்கு மட்டும் இருந்தால் போதும். மற்றபடி வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த கிரேவியை வெறும் 10 நிமிடத்தில் மிக மிக சுலபமாக செய்து விடலாம். வாங்க அந்த சூப்பர் ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
முதலில் 2 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தபடியாக இரண்டு மீடியம் சைஸ் பழுத்த தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் அப்படியே இருக்கட்டும்.
உருளைக்கிழங்கு கிரேவியை தாளிக்க ஒரு குக்கரை அடுப்பின் மீது வையுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக சூடானதும், சீரகம் – 1/2 ஸ்பூன், பட்டை – 1, லவங்கம் – 2, ஏலக்காய் – 1, பிரிஞ்சி இலை – 1, சேர்த்து தாளித்து விட்டு, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து, மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1, மிக மிக பொடியாக நறுக்கியது சேர்த்து, வெங்காயம் கால்பாகம் வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கி விட வேண்டும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாடை நீங்கியதும், அரைத்து வைத்திருக்கும் தக்காளி பழ விருதினை குக்கரில் சேர்த்து, இரண்டு நிமிடம் போல மீண்டும் வதக்கி விட்டு, இதோடு தனியா தூள் – 1 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து மீண்டும் ஒரு முறை மசாலா பொருட்களின் பச்சை வாடை போகும் வரை வதக்கி, வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, உருளைக்கிழங்கு பாதி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி நன்றாக கலந்துவிட வேண்டும்.
இந்த கிரேவி நமக்கு இன்னும் கொஞ்சம் ரிச்சாக தேவை என்றால் 10 லிருந்து 15 முந்திரிப் பருப்புகளை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்து இந்த கிரேவியோடு சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
கிரேவி ஒரு கொதி வந்ததும் உப்பு காரம் சரி பார்த்து, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, குக்கரை மூடி போட்டு ஒரே ஒரு விசில் வைத்தால் போதும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்து கிரேவி திக்காக நமக்கு கிடைத்துவிடும். அவ்வளவு தான், இறுதியாக கிரேவியில் கொத்தமல்லி தழைகளைத் தூவி பரிமாற வேண்டியது தான். இந்த உருளைக்கிழங்கு கிரேவி செய்து முடிக்க 15 நிமிடங்கள் கூட எடுக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
இந்த கிரேவியை குக்கரில் செய்யாமல் கடாயிலும் செய்யலாம். ஆனால் உருளைக்கிழங்கு வேக பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் அட்டகாசமான மசாலா நிறைந்த இந்த கிரேவியை மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. சப்பாத்தி நாண் மட்டுமல்லாமல், இட்லி தோசைக்கும் சைட் டிஷ் ஆக வைத்துக் கொண்டால் சுவையாகத்தான் இருக்கும்.