
சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரதோஷம் என்றால் என்ன என்பதை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். அதே சமயம் சனி மகா பிரதோஷத்தின் விசேஷங்களும் தெரிந்திருப்பார்கள். அப்படி தெரிந்தவர்கள் சனி மகா பிரதோஷத்தை யாரும் தவறவிட மாட்டார்கள். தவறாமல் அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று விரதமிருந்து வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட வழிபாடு செய்யும்பொழுது செய்ய வேண்டிய சில செயல்களைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
நம்முடைய கர்ம வினைகளை அழிக்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் சிவபெருமான். சிவபெருமானை வழிபடும் பொழுது நமக்கு கஷ்டங்கள் வரும். அந்த கஷ்டங்களை சமாளித்து நாம் வெளியே வரும்பொழுது நம்முடைய கர்ம வினைகள் முற்றிலும் நீங்கிவிடும். இதனால் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களும் நீங்கி நன்மைகள் உண்டாகும். அவ்வளவு அற்புதமான ஆற்றல் கொண்ட சிவபெருமானை சனி மஹா பிரதோஷத்தன்று வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கம் இருப்பவர்கள் அவர்களின் முறைப்படியே விரதம் இருந்து வழிபாடு செய்து கொள்ளலாம். விரதம் இருக்க இயலாது மாத்திரை உண்ணவேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு எளிமையான உணவுப் பொருட்களை உட்கொண்டு விரதம் இருக்கலாம். இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கூறப்படுவது என்னவென்றால் அரிசி சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான்.
இதற்கு முக்கியமான காரணம் அரிசி என்பது ஒரு லிங்க வடிவம் என்பதால் பிரதோஷ தினத்தன்று அரிசி சம்பந்தப்பட்ட பொருட்களை நம் உணவாக எடுத்துக் கொண்டோம் என்றால் பிரதோஷத்திற்குரிய பலனை நம்மால் முழுமையாக பெற முடியாது. அதனால் அரிசி சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விட்டு பிற எளிய உணவுகளை உட்கொண்டும் சிவபெருமானை வழிபாடு செய்யலாம்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் சிவபெருமானின் படத்தை அல்லது லிங்கத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவர்களுக்கு முன்பாக ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து “சிவாய நம சிவாய நம சிவாய நம” என்று மூன்று முறை கூறி உங்களுடைய விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்வது என்பது பல அற்புதமான பலன்களை தரும்.
வீட்டிலிருந்தே பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய லிங்கத்திற்கு மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி அபிஷேகம் செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் நீங்குவதோடு தடைப்பட்டிருக்கும் மங்களகரமான நிகழ்ச்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதிலும் குறிப்பாக கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி பன்னீர் ஊற்றி கரைத்து அபிஷேகம் செய்வது என்பது இன்னும் அதிக பலனை தரும் என்றே கூறலாம்.
இதோடு மட்டுமல்லாமல் இந்த அபிஷேகம் செய்யும் நேரத்தில் “ஹர ஹர சங்கர” என்னும் மந்திரத்தை உச்சரித்தவாறு அபிஷேகம் செய்ய சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நம்முடைய கர்ம வினைகளை தீர்க்கக் கூடியவர் சிவபெருமான் என்பதால் பிரதோஷ தினத்தன்று நம்மால் இயன்ற அன்னதானங்களை நாம் செய்யும்பொழுது நம்முடைய கர்மவினைகள் விரைவிலேயே குறையும்.
இதையும் படிக்கலாமே: வெற்றி மேல் வெற்றி பெற ஏற்ற வேண்டிய தீபம்
மிகவும் எளிமையான இந்த வழிமுறைகளை முழுமனதோடு பின்பற்றுபவர்களுக்கு சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்க பெறுவதோடு மங்கலங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். வினைகள் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.