
தீபாவளி என்றாலே அனைவருக்கும் பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வகைகள் புத்தாடைகள் என பல வகையான சந்தோஷ நிகழ்வுகளும் தான். இத்துடன் அன்றைய தினத்தில் நாம் செய்ய வேண்டிய இன்னும் சில முக்கியமான வழிபாடுகளும் பூஜைகளும் உள்ளது. இந்த தீபாவளியில் நாம் கொண்டாடும் அனைத்து நிகழ்வும் வருடம் முழுவதும் நமக்கு நிலைத்து இருக்க வேண்டும் என்றால் அதற்கு தாயாரின் அனுகிரகம் பரிபூரணமாக தேவை.
ஏனெனில் செல்வத்தையும், சந்தோஷத்தையும், நிம்மதியும் அள்ளித் தரக்கூடியவராக திகழ்ந்தவர் தான் மகாலட்சுமி தாயார். தீபாவளி அன்று நாம் வணங்கக் கூடிய தெய்வங்களில் முக்கியமானவரும் மகாலட்சுமி தாயார் தான். இந்த வருடம் தீபாவளியானது வியாழக்கிழமை யில் வந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் வியாழக்கிழமை என்பது குபேரருக்குரிய நாளாக கருதப்படுகிறது இவரும் செல்வத்திற்குரிய தெய்வம் தான்.
செல்வாதிபதிகளான இந்த இருவருக்கும் உகந்த இந்த நாளில் நாம் செய்யக்கூடிய சில சிறு விஷயங்கள் கூட பல மடங்கு நம்முடைய குடும்பத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது அந்த வகையில் தீபாவளி அன்று நாம் நிலைவாசலில் செய்யக்கூடிய ஒரு எளிய பூஜை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இந்த பூஜையை நீங்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலையில் செய்ய வேண்டும். அதாவது தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து முடித்த பிறகு இதை செய்வது சிறந்தது. அதற்கு முதலில் ஒரு பொடி தயார் செய்ய வேண்டும். இந்தப் பொடி தயார் செய்ய மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், பச்சைக் கற்பூரம், பட்டை தூள், ஜாதிக்காய் தூள், கிராம்புத்தூள் இவை அனைத்தையும் தயார் செய்து கொள்ளுங்கள். இதில் சிறிதளவு பன்னீரை ஊற்றி நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள்.
அதே போல் வாசலை நன்றாக சுத்தம் செய்த பிறகு ஒரு சிறிய துணி கொண்டு அதை பன்னீரில் நனைத்து அதை வைத்து வாசற்படியை துடைத்து விடுங்கள். இதை செய்த பிறகு நீங்கள் குழைத்து வைத்த இந்த பொடியை நிலைவாசலில் நன்றாக பூசிய பிறகு நல்ல வாசம் மிக்க குங்குமத்தால் ஒன்பது பொட்டு வைக்க வேண்டும். நாம் கலந்து இருக்கும் இந்தப் பொருட்கள் அனைத்தும் சுக்கிரன் மகாலட்சுமி தாயார் குபேரர் அனைவரின் அருளையும் நமக்குப் பெற்றுத் தரக்கூடியவை.
அதன் பிறகு நிலை வாசலுக்கு வெளியே ஒரு உருளியில் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் பன்னீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் நாம் கலந்து வைத்த இந்த வாசனை பொடியும் சேர்க்க வேண்டும். அதன் பிறகு நல்ல வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். இவையெல்லாம் செய்த பிறகு வாசனை மிக்க ஊதுபத்தியை நிலை வாசலில் ஏற்றி வைத்து விட்டு, இந்த உருளிக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
அதன் பிறகு இந்த உருளியை வீட்டிற்குள் கொண்டு சென்று வரவேற்பறை அல்லது பூஜையறை என உங்களுக்கு எங்கே அதை வைக்க முடியுமோ அந்த இடத்தில் வைத்து விடுங்கள். இந்த ஒரு வழிப்பாட்டை நீங்கள் காலையிலே செய்யும் பொழுது சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடிய தாயார் குபேரர் சுக்கிரர் போன்ற அனைவரின் ஆசியும் தீபாவளி திருநாளின் நிச்சயம் பெறலாம் என்பது நம்பிக்கை. இதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் போல் உங்களுடைய வழிபாட்டையும் கொண்டாட்டங்களையும் தொடரலாம்.
இதையும் படிக்கலாமே:தீபாவளியை எப்படி கொண்டாடுவது?
இந்த ஒரு வழிபாட்டை தீபாவளி அன்று தொடங்கி அதன் பிறகு வெள்ளிக்கிழமை தோறும் செய்வது மிகுந்த பலனைத் தரும். இவ்வாறு நினைவாசல் செய்வோர் இல்லம் என்றென்றைக்கும் சகல ஐஸ்வர்யங்களால் நிறைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலை வாசல் வழிபாட்டை நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்