கலாச்சார ரீதியாக பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படும் இந்த தீபாவளி பண்டிகை, நம் வாழ்க்கையில் இருக்கும் இருளை நீக்கி ஒளியை கொடுக்க வல்லது என்பது மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. வாழ்வில் ஒளி தரும் இந்த தீப ஒளி (தீபாவளி) திருநாளை எப்படி கொண்டாடினால் ஆண்டு முழுவதும் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்கலாம்? தீபாவளி நாளில் செய்ய வேண்டியது என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.
இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் ஆகியோரால் பிரபலமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி பண்டிகையில் எல்லோருடைய மனமும், முகமும் மலர்ச்சியுடன் காணப்படும். தீபாவளி நாளில் அருணோதய வேளையில் குளித்து முடித்து விட வேண்டும். சூரிய உதயம் ஆவதற்கு முன் உள்ள 48 நிமிட காலத்தை அருணோதய காலம் என்று கூறுவார்கள். இந்த அருணோதய காலத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டு குளித்து முடித்து விட வேண்டும்.
புத்தாடை உடுத்தி பூஜைக்கு தயார் செய்ய வேண்டும். பூஜையின் பொழுது மகாலட்சுமி தாயாரை முதன்மையாக வைத்து வழிபட வேண்டும். மஞ்சளை பிள்ளையாராக முதலில் பிடித்து வைத்து பின்பு மகாலட்சுமி தாயாரின் பூஜையை துவங்க வேண்டும். பூஜையில் முக்கியமாக அம்மி மற்றும் குழவி இடம் பெற வேண்டும். சதுர்த்தியில் திருக்கேதாரத்தில் அன்னை பார்வதி தேவி ஈசனின் உடலில் பாதியை அடைய தவம் புரிந்தார். அதன்படி சிவனும், பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார்கள். எப்போதும் பிரியாமல் இப்படியே சிவனின் மறுபாதியாக இருக்க பார்வதி தேவி, தீபாவளி நாளில் கேதார கௌரி விரதத்தை கடைப்பிடித்தார்.
பக்தர்களும் தீபாவளி நாளில் கேதார கௌரி விரதத்தை மேற்கொண்டு கணவன் மனைவி இணை பிரியாமல் ஒற்றுமையாக இருக்க பிரார்த்திப்பார்கள். தீபாவளி அன்று அம்மியையும், குழவியையும் சிவசக்தியாக நினைத்து பூஜையில் வைத்து வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இதனால் கணவன் மனைவிக்குள் பிரியாத ஒற்றுமை, அன்னோன்யம், அன்பு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
ஆண்டுதோறும் விரதம் இருந்தாலும் கிடைக்காத ஒரு பலன் இந்த தீபாவளி நாள் அன்று குபேரனை வழிபடுவதால் நிச்சயம் கிடைக்கும். புதிய கணக்கு துவங்குபவர்கள் இந்த நாளில் துவங்க வேண்டும். பெரிய வியாபாரிகள், முதலாளிகள் மட்டும் அல்ல, நம் வீட்டிலும் சிறு கணக்குகளை துவங்க, இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய கணக்கில் செலவை காட்டிலும், வரவு பன்மடங்கு இனி பெருக ஆரம்பிக்கும்.
மாலையில் வீடு எங்கும் ஒளி பரவும்படி நிறைய விளக்குகளை முடிந்தவரை ஏற்றி வையுங்கள். தீபாவளி துவங்கி மூன்று நாட்கள் வீட்டில் அந்தி சாய்ந்த பிறகு தீபம் எறிய வேண்டும். குபேர பகவானுக்கு நைவேத்தியம் படைத்து ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வளவு நாணயங்கள் இல்லாதவர்கள் 51 அல்லது 101 நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம். செல்வத்திற்கு அதிபதியான குபேர வழிபாடு தீபாவளி நாளில் செய்வதன் மூலம் ஆண்டுதோறும் பணத்தட்டுப்பாடு என்பது இருக்காது.
இதையும் படிக்கலாமே:
30-10-2024 ஐப்பசி மாத சிவராத்திரி வழிபாடு
கைலாய மலையில் தீபாவளி அன்று சிவபெருமானும், பார்வதி தேவியும் இணைந்து சொக்கட்டான் ஆடி மகிழ்ந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. அதனால் இரவில் சொக்கட்டான் விளையாடி குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதால், அந்த நாள் மட்டுமல்லாமல் வருடம் தோறும் மகிழ்ச்சியுடன் இருப்போம் என்பது நம்பிக்கை. மேலும் தீபாவளி நாளில் தன்னலம் கருதாது, பிறருக்கும் வயிறார உணவினை தானம் அளிக்க வேண்டும். இறைவனுக்கு தானம் செய்வதால் நாம் பக்தர், ஆனால் இயலாதவர்களுக்கு தானம் செய்தால் நாமே இறைவனாக மாறி விடுவோம். பாற்கடலை கடைந்த போது தன்வந்திரி தோன்றிய நாளும் இந்த நாள் என்பதால், தீபாவளி முடிந்ததும் ஆயுர்வேத மருந்துகளால் தயாரித்த லேகியத்தை சாப்பிட்டால் ஆண்டு முழுவதும் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். தீபாவளி நாளை இப்படி கொண்டாடுவதால் நரகாசுரன் அழிந்தது போல, நம் வாழ்க்கையில் இருக்கும் துன்பம் என்னும் எதிரியும் அழிந்து இன்பமான வாழ்க்கை அமையும்.