
சூரிய பகவான் உக்கிரமாக இருக்கக்கூடிய நாட்களை தான் அக்னி நட்சத்திரம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட நாட்களில் உக்கிர தெய்வமாக இருக்கக்கூடிய வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. நியாயமான வேண்டுதலை முன்வைத்து அக்னி நட்சத்திர நாட்களில் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் பொழுது அந்த வழிபாட்டின் பலன் என்பது அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் செல்வ செழிப்பை அதிகரிப்பதற்கு அக்னி நட்சத்திரத்தின் முதல் நாள் அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
உக்கிர தெய்வங்கள் என்றும் நரசிம்மர், பைரவர், வராகி, வீரபத்திரர், பிரத்யங்கரா தேவி, காளியம்மன் போன்றோர் ஞாபகத்திற்கு வருவார்கள். அந்த வகையில் கலியுகத்தில் பலரும் வழிபாடு செய்யக்கூடிய தெய்வமாக திகழ்பவள்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை வழிபாடு செய்வதற்கென்று விசேஷமான நாட்கள் இருக்கின்றன. அந்த நாட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் அஷ்டமி திதி வரக்கூடிய நாள். அதிலும் வராகி அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது உகந்த கிழமையாக கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையோடு வளர்பிறை அஷ்டமியும் சேர்ந்து வரக்கூடிய நாளன்று அக்னி நட்சத்திரமும் ஆரம்பிக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது.
இந்த வழிபாட்டை மே மாதம் நான்காம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம். காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 5 மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு வீட்டில் வாராகி அம்மனின் சிலை இருக்கும் பட்சத்தில் சுத்தமான தண்ணீரில் பன்னீரை கலந்து அபிஷேகம் செய்ய வேண்டும். ஒரு வேளை சிலையில்லை படம் தான் இருக்கிறது என்பவர்கள் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாராகி அம்மனுக்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அதில் கோதுமையை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு வாராகி அம்மனின் மந்திரமான “ஓம் மகாவாராகியே நமோ நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். வாராகி அம்மனுக்கு பானகம் மற்றும் அவலில் இனிப்பை கலந்து வைத்து நெய்வேத்தியம் செய்வது என்பது மிகவும் சிறப்பு. பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிடலாம். இயன்றவர்கள் அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளன்று அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று குங்குமத்தை வாங்கி தருவது என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:அக்னி நட்சத்திர தோஷம் நீங்க
அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க கூடிய முதல் நாள் அன்று வாராகி அம்மனை முழுமனதோடு இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்பில் எந்த வித குறையும் ஏற்படாது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.