
ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவரவர்களுடைய ராசியின்படி இஷ்ட தெய்வம் என்ற ஒரு தெய்வத்தை வழிபாடு செய்வார்கள், அதை தவிர்த்து குலதெய்வம் வழிபாடு செய்வார்கள். இதோடு சேர்த்து ஒவ்வொரு மாதமும் அவர்களுடைய ராசியின்படி நவகிரகங்களின் சஞ்சார படி ஒவ்வொரு தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அந்த மாதம் சிறப்பான மாதமாக மாறுவதோடு அந்த மாதத்தில் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஜோதிடம் குறித்த பகுதியில் செப்டம்பர் மாதம் ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
செப்டம்பர் மாதம் என்பது ஆவணி மாதம் பதினாறாம் தேதி திங்கட்கிழமை அன்று பிறக்கிறது. அன்றைய தினம் நவமி திதி இருக்கிறது. மேலும் அன்றைய தினம் கேட்டை நட்சத்திரம். திங்கட்கிழமையோடு சேர்ந்து பிறக்கக்கூடிய இந்த செப்டம்பர் மாதத்தை சிறப்பான மாதமாக மாற்றிக் கொள்ள ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் கூற வேண்டிய மந்திரம் மற்றும் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரங்கள் என்று பல இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதம் சனீஸ்வர பகவானையும் பைரவரையும் வழிபாடு செய்ய வேண்டும். காகம் மற்றும் நாய்க்கு உணவளிக்க வேண்டும். “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை கூற வேண்டும். ரிஷப ராசிக்காரர்கள் காளிதேவியையும், துர்க்கை அம்மனையும் வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய் வெள்ளிக்கிழமையில் துர்க்கை வழிபாடு சிறப்பை தரும். “ஓம் துர்க்கையே நமோ நம” என்னும் மந்திரத்தை கூற வேண்டும். மிதுன ராசிக்காரர்கள் பார்வதி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளி செவ்வாய்க்கிழமையில் அம்மன் ஆலயத்திற்கு செல்வது நல்ல பலனை தரும். “ஓம் பார்வதியே நமோ நம” என்னும் மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
கடக ராசிக்காரர்கள் வாயு பகவானை வழிபாடு செய்ய வேண்டும். மான் படத்தை அதிக அளவில் பார்ப்பது நல்ல யோகத்தை உண்டாக்கும். தினமும் மூச்சுப் பயிற்சி செய்வது சிறப்பு. இயன்றவர்கள் காளகஸ்தி சென்று வழிபாடு செய்ய வேண்டும். சிம்ம ராசிக்காரர்கள் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமை தோறும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நல்ல பலனை தரும். “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் அனுமனை வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமை தோறும் ஹனுமன் வழிபாடு வாழ்க்கையில் சிறப்பை உண்டாக்கும். இயன்றவர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு செல்லலாம். “ஸ்ரீ ராமஜெயம்” என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
துலாம் ராசிக்காரர்கள் தாத்ரேயரையும், குரு பகவானையும் வழிபாடு செய்ய வேண்டும். இந்த மாதத்தில் மஞ்சள் நிறத்தை அதிக அளவில் தேர்வு செய்வது நல்ல பலனை தரும். நாய்களுக்கு உணவளிப்பது சிறப்பு. விருச்சிக ராசிக்காரர்கள் இந்திரனை வழிபாடு செய்ய வேண்டும். யானைக்கு உணவளிப்பது, யானையின் படத்தை பார்ப்பது யோகத்தை தரும். “ஓம் இந்திர பகவானை நமோ நம” என்னும் மந்திரத்தை கூற வேண்டும்.
தனுசு ராசிக்காரர்கள் ப்ருதிவியை வழிபாடு செய்ய வேண்டும். ப்ருதிவியை வழிபாடு செய்ய இயலாதவர்கள் குலதெய்வ வழிபாட்டிலும் குலதெய்வத்தின் மந்திரத்தை கூறுவதையும் பின்பற்ற வேண்டும். மகர ராசிக்காரர்கள் பிரம்மாவை வழிபாடு செய்ய வேண்டும். பிரம்ம தேவரை வழிபாடு செய்வதோடு தினமும் “ஓம் பிரம்மாவே நமோ நம” என்னும் மந்திரத்தை கூறி வருவதன் மூலம் புதிதாக தொடங்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். கும்ப ராசிக்காரர்கள் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். திங்கட்கிழமை தோறும் சிவாலயம் செல்வது நல்ல பலனைத் தரும். எருமை மாட்டிற்கு உணவளிப்பது வாழ்க்கையில் வெற்றியை உண்டாக்கும். மீன ராசிக்காரர்கள் பலராமரையும் பெருமாளையும் வழிபாடு செய்ய வேண்டும். “ஜெய் ஸ்ரீ ராம்” என்னும் மந்திரத்தை கூறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. விவசாயிகளுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்வது நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே: தனதானியம் பெருக சிவ வழிபாடு
செப்டம்பர் மாதம் சிறப்பான மாதமாக அமைவதற்கு மேல் சொன்ன தெய்வங்களை வழிபாடு செய்வதோடு நம்முடைய முழு முயற்சியையும் நாம் மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பாக வெற்றிகள் நம்மை தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.