- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பல வருடங்களாக ஆற்றில் மூழ்கிக்கிடந்த வரலாறு தெரியுமா?

ஸ்ரீ ரங்க பெருமாளின் சிலை ஆரம்பகாலத்தில் பிரம்மாவிடமே இருந்தது. அந்த சிலையை வைத்து அவர் நாள்தோறும் பூஜித்து வந்தார். இந்த நிலையில் சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு, பிரம்மதேவனை நோக்கி தவம் செய்ய அந்த தவத்தின் பயனாக மன்னன் முன் பிரம்மா தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்றார். “நீங்கள் தினமும் வணங்கும் பெருமாள் சிலையே எனக்கு வரமாக வேண்டும்” என்றான் மன்னன். பிரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்த அற்புத சிலையை அவனிடம் கொடுத்தார்.

அந்த பிறகு அவன் வம்சத்தை சார்ந்தவர்களே அந்த பெருமாள் சிலைக்கு பூஜை செய்து வந்தனர். இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான். ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ராவணனின் தம்பியான விபீஷணர் ரங்கநாத பெருமாளின் சிலையை ராமனிடம் இருந்து பரிசாக பெற்றார்.

- Advertisement -

அதன் பிறகு அந்த சிலையோடு ஆகாயவிமானத்தில் தன் நாடு திரும்புகையில், காவேரி கரையில் கோவில்கொள்ள விரும்பிய பெருமாள் விபீஷ்ணருக்கு உடல் சோர்வை ஏற்படுத்தினார். அதன் காரணமாக ஆகாய விமானத்தை தரை இறக்கிவிட்டு அரங்கம் என்னும் மேட்டு பகுதியில் பெருமாளின் விக்ரஹத்தை வைத்துவிட்டு நீராடச்சென்றார்.

நீராடிவிட்டு மீண்டும் வந்து விக்ரஹத்தை அவர் எடுக்க முயன்றார் ஆனால் அவரால் எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் அவரால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. அப்பகுதியை ஆண்ட தர்மவர்மன் என்னும் மன்னனுக்கு இந்த தகவல் எட்டியது. உடனே அவன் அங்கு கோவில் கட்ட முடிவு செய்து கோவிலையும் எழுப்பினான். அனால் சில காலத்திற்கு பிறகு முறையான பராமரிப்பு இல்லாததால் அந்த கோவில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதையுண்டு போனது.

பல ஆண்டுகளுக்கு பிறகு, தர்மவர்மன் மரபில்வந்த கிள்ளிவளவன் என்னும் மன்னன் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அப்போது களைப்பாற ஒரு மரத்தடியில் அமர்ந்தான், அப்போது அங்கு வந்த ஒரு கிளி ரங்கநாத பெருமாளின் கோவில் ஆற்றில் மூழ்கிக்கிடக்கும் விடயத்தையும் அந்த கோவில் உருவான வரலாறையும் மன்னனிடம் கூறியது. பெருமாளே நேரில் வந்து தன் இருப்பிடத்தை காட்டியதாக உணர்த்த மன்னன், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளின் கோவிலை புனரமைத்தான். ஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -