- Advertisement -
பொது பலன்

எந்த ராசிக்கு சுக்கிரனால் என்ன பலன் தெரியுமா ?

ஒருவர் நல்ல வசதியான வாழ்க்கைப் பெற்று சுகமாக வாழ்வதைக் காண்போர் அவருக்கு “சுக்கிர தசை” என்று கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் சுக்கிரதத் தசை ஓடிக்கொண்டிருக்கும் அனைவருமே சீறும் சிறப்புமான வாழ்க்கை வாழ்வதில்லை. அதற்கு சுக்கிரன் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் மட்டுமே சுக்கிரத் தசைக் காலத்தில் கூறியபடி பலன்களைக் காணமுடியும். சுக்கிரன் ஜாதகத்தில் எந்தெந்த ராசியிலிருப்பதால், என்னென்ன பலன்கள் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.

மேஷம்:

மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் அவர்கள் இயற்கையை அதிகம் நேசிப்பார்கள். அத்தகைய இடத்தில் தங்களின் வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். முரட்டுத்தனமான பேச்சைக்கொண்டவர்களாக இருப்பதால் அடிக்கடி வம்பு வாய்த் தகராறில் ஈடுபடுவர். சற்று சபல புத்தி இருப்பதால் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. இவர்களிடம் குற்றம் புரியும் எண்ணங்கள் சற்று மேலோங்கியிருக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உறவினர்களால் மிகவும் மதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தக்க சமயத்தில் செய்வர். விவசாயம் பண்ணைத்தொழில் இவர்களுக்கு மிகுந்த லாபத்தைக் கொடுக்கும். சிறந்த கல்வியைக் கற்பார்கள். ஓரு சிலர் சமுதாயத்திற்கு தொண்டு புரியும் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

மிதுனம்:

மிதுனத்தில் சுக்கிரன் இருக்கப்பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருப்பார்கள். விஞ்ஞானம் சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் புதிய கருவிகளை உருவாக்கும் திறன்களைக் கொண்டிருப்பர். கலைத்துறையில் ஆர்வம் அதிகமிருக்கும். ஓரு சிலர் அதில் ஈடுபட்டு மிகப்பெரும் புகழடைவார்கள். மற்றவர்களிடம் கனிவாக நடந்துக் கொள்ளக்கூடிய நற்பண்புகளைப் பெற்றிருப்பர். காதல் விவகாரங்களில் வெற்றியாளர்களாக திகழ்வார்கள்.

கடகம்:

கடக ராசியில் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகர் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகமிருக்கும். ஆன்மீகம் சம்பந்தமான புனித காரியங்களில் அதிகம் ஈடுபடுவர். அழகான தோற்றம் கொண்டிருப்பார்கள். அதிகமான செல்வங்களை ஈட்டுவார்கள். ஒரு தீய சகவாசத்தின் காரணமாக பல தீய பழக்கங்களுக்கு அடிமையாகி துன்புறுவர். அரசியல் அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகிப்பர். உடல் மற்றும் மனவலிமைக் கொண்டவர்கள்.

சிம்மம்:

சிம்மத்தில் சுக்கிரன் இருக்கப்பெற்றவர்கள் நல்ல மனைவி மற்றும் குழந்தைகள் அமையப்பெறுவார்கள். உடல் திடம் மிதமானதாக இருக்கும். பிறருக்கு உதவும் குணமுள்ளதால் சமுதாயத்தில் அனைவராலும் விரும்பப்படுவார்கள். இவர்களின் வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே ஒரு நடுநிலைத்தன்மை இருக்கும். சான்றோர்களின் ஆசி இவர்களுக்கு எப்போதுமிருக்கும். உறவு நட்பு ஆகியவைகளை சரிசமமாக பேணிக் காப்பார்கள்.

கன்னி:

கன்னி ராசியில் சுக்கிரன் இருந்தால் அவர்களிடம் நற்குணங்கள் மிகுந்திருக்கும். மனிதாபிமான எண்ணங்களும் செயல்களும் அதிகம் காண முடியும். பொருளாதார ரீதியில் இவர்கள் வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது. தோற்றத்திலும் வாழ்விலும் எளிமையைக் கடைப்பிடிப்பார்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகமிருக்கும். காதல் விவகாரங்களில் பிரச்சனைகளை சந்திப்பர். பல தொலைதூரப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்வார்கள்.

துலாம்:

சுக்கிரனின் சொந்த வீடான துலாமில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள் சிறந்த உயர்கல்வியைப் பெறுவார்கள். பார்வைக்கு அழகிய தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். குபேரனைப் போல செல்வதை ஈட்டுவார்கள். வீரம் நிறைந்தவர்களாக இருப்பதால் பல வீர சாகசங்களை புரிந்து புகழ்பெறுவர். வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வர். மிகுந்த சுறுசுறுப்புத் தன்மைக் கொண்டவர்களாக இருப்பர்.

விருச்சுகம்:

விருச்சிகத்தில் சுக்கிரன் இறுக்கப் பிறந்தவர்கள் பேச்சில் துடுக்குத்தனமும் தர்க்கம் புரியும் தன்மையும் இருக்கும். எனவே இவர்களின் பேச்சை மற்றவர்கள் ஏற்கும் நிலையிருக்கும் இந்த ராசிக்கே உரிய முன்கோப குணம் அதிகமிருக்கும். தேள் கொட்டுவது போல பிறரை வார்த்தைகளால் காயப்படுத்திவிடுவர். சிறந்த கணிதத்திறன் இருக்கும். வாழ்வின் மத்திய வயதுகளில் நல்ல பொருள் சேர்க்கை உண்டாகும்.

தனுசு:

தனுசில் சுக்கிரன் இருப்பவர்களுக்கு எதிர் பாலினத்தவரை ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பர். அழகான உடல் தோற்றம் கொண்டிருப்பார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு நாட்டை ஆளக் கூடிய யோகம் ஏற்படும். மனைவி வழியில் தன லாபமேற்படும். கலைத்துறையில் இருப்பவர்கள் பல சாதனைகள் செய்து பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவார்கள். பொதுவாழ்வில் அனைவராலும் விரும்பப்படுவார்கள்.

மகரம்:

மகரத்திலிருக்கும் சுக்கிரனால் இதயம் மற்றும் உள்ளுறுப்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். தீய குணங்கள் சில இந்நபரிடம் இருக்கும். பெண்களால் பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். தேக பலமில்லையென்றாலும், அழகிய உருவ அமைப்பைக் கொண்டிருப்பர். தீய பழக்கங்களால் பொருளிழப்பு ஏற்படும். நல்ல வாழ்க்கைத் துணை அமைந்த பின்பு தான் இவர்களின் வாழ்க்கை மேம்படும்.

கும்பம்:

கும்பத்தில் சுக்கிரன் இருந்தால் மிக அழகான முகத்தையும், தேகத்தையும் கொண்டிருப்பர். ஆன்மிக விஷயங்களில் இவர்களுக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்காது. இவர்களின் குடும்பப் பொருளாதாரம் சுமாரான நிலையிலேயே இருக்கும். வாழ்க்கைத் துணையால் கட்டுப்படுத்தப்படுவர். எந்நேரமும் ஒரு மந்தத் தன்மை இவர்களிடம் நிறைந்து காணப்படும். சிறந்த மனஉறுதி கொண்டவர்கள்.

மீனம்:

மீனத்தில் உள்ள சுக்கிரனால் இந்நபருக்கு சிறப்பான பேச்சாற்றல் இருக்கும். அதன் மூலமே இவர்கள் நல்ல செல்வம் பெறுவர். இவர்கள் தொட்டக் காரியங்கள் அனைத்தும் மிகப்பெரும் வெற்றியடையும். சமுதாயத்தில், அரசியலிலுல்லோர் சரித்திரப் புகழைப் பெறுவார்கள். நல்ல பண்புகளுக்கு இலக்கணமாகத் திகழ்வார்கள். அழகான மனைவி மற்றும் குழந்தைகள் அமையும்.

காதல், பெண்களிடம் ஈடுபாடு, கலைகளில் ஆர்வம், பிற உயிர்களிடம் அன்பு போன்றவை ஏற்பட சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பெண்களால் வம்பு வழக்குகள், நீரிழிவு நோய், ரகசிய நோய்கள் சுக்கிரன் நீசமடைவதால் ஏற்படுவதாகும்.

- Advertisement -
- Advertisement -