
பொதுவாகவே சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி உண்பவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். அதிலும் காய்கறி என்றால் சுத்தமாக அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் காய்கறிகளில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கணக்கிலடங்காத அளவிற்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் தண்ணீர் காய்கள் என்றால் அவற்றை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தவிர்த்தே வைக்கின்றனர். ஆனால் தண்ணீர் காய்கள் உடம்பிற்கு மிகவும் நன்மை தரக்கூடியது. இதில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்து நிறைந்து காணப்படுகிறது.
இதனை உணவுடன் சேர்த்துக் கொள்ள தேவையற்ற கொழுப்புக்களை உடலில் இருந்து அகற்றுகிறது. எனவே நீர் காய்கறிகளை தவறாமல் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படி நீர் காயான சுரைக்காயுடன் முட்டை சேர்த்து பொடிமாஸ் போன்று செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவருமே இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் – 1, முட்டை – 4, பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – 2, கடுகு – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சீரகம் – அரைஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் சுரைக்காய் மேல் உள்ள தோலை சீவி, அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீரில் அலசி வைக்க வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
பிறகு இந்த தண்ணீரில் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து தட்டு போட்டு மூடி, 5 லிருந்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு சுரைக் காய் வெந்ததும் அதிலுள்ள தண்ணீரை வடிகட்டிக், காயை மட்டும் வேறு ஒரு தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை எண்ணெயில் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு வேக வைத்துள்ள சுரைக்காயை இதனுடன் சேர்த்து, அதனுடன் உப்பையும் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கி விட வேண்டும். பின்னர் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்றாக கிளறி விட்டு, 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி கிளறி விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.