- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீரில் உள்ள விசித்திர கோவில்

மக்கள் செல்வதற்கு ஏதுவாக ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் பல கோவில்கள் அமைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல் முருகன் உள்ளிட்ட பல கடவுள்களின் கோவில்கள் மலை மேல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். அனால் இவற்றை எல்லாம் கடந்து ஒரு விசித்திரமான குகை கோவிலை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். பல நூறு ஆண்டுகளாக இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் நரசிம்மரை காண்பது அவ்வளவு எளிதல்ல.

- Advertisement -

ஆங்காங்கே வவ்வால்கள் தொங்கிக்கொண்டிருக்கும் 300 அடி நீளமுள்ள குகையில், நான்கு அடி உயரத்திலிருந்து ஐந்து அடி உயரம் வரை தண்ணீர் உள்ளது. மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றால் தான் இங்குள்ள நரசிம்மரை தரிசிக்க முடியும்.

குகையின் முடிவில் சிவ லிங்கமும், நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றினார் என்று சிலர் கூறுகின்றனர்.

- Advertisement -

இன்னும் சிலர், பிரகலநாதனுக்காக நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர் ஜலசூரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ததாகவும். அந்த அரக்கன் ஒரு சிறந்த சிவ பக்தன் என்றும்.

இந்த குகையில்தான் அவன் தவம் செய்து சிவனை வழிபட்டதாகவும், நரசிம்மர் அவனை வதம் செய்த பின்னர் இந்த குகையில் அவன் ஜலமாக(நீராக) மாறி சிவனின் பாதத்தில் இருந்து ஊற்றெடுத்ததாகவும், அந்த அசுரனின் ஆசைக்கு இணைக்க நரசிம்மர் இந்த குகையில் குடிகொண்டார் என்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. மக்கள் அதில் நடந்து கொண்டே இருப்பதால் நீர் தெளிவாக காணப்படவில்லை. இந்த நீரில் சல்ஃபர் சக்தி உள்ளது. இதனால் தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை அந்த நீரில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தக் கோவிலுக்கு எதிர்ப்பக்கமாக சிறிது தாழ்வான இடத்தில் ஒரு சிறிய குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குகையில் இருந்து வெளியேறும் நீரானது அந்த குலத்திற்கு போய் சேருமாறு வழி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குகைப்பாதையில் பக்தர்கள் செல்வதற்கு கடினமாக இருப்பதால், ஜர்னி நரசிம்மரை வழிபட பக்தர்களுக்கு கைப்பிடியும் மேல்பரப்பில் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. நரசிம்மரை தரிசனம் செய்யும் போது கோவிந்தா நரசிம்மா ஹரி ஹரி என்ற மந்திரத்தை உற்சாகத்துடன் பக்தியுடன் கூறிக் கொண்டே செல்கின்றனர். அந்தக் குகையின் முடிவில் உள்ள இடத்தில் குறைந்தது எட்டு பேர் நின்று தரிசிக்கும் அளவிற்கு இடம் உள்ளது. அந்த எட்டு பேரும் தரிசித்து திரும்பும் வரை மற்ற பக்தர்கள் குகை வழியில் உள்ள நீரில் நின்றபடி காத்திருக்க வேண்டும்.

கடினமான பாதைகளை கடந்து நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செல்லும் பக்தர்களுக்கு இங்கு நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த கோவிலுக்கு சென்றால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  இந்தக் கோவில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றைப் பார்க்கும் போது இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வரவேண்டும் என்ற எண்ணம் நமக்கும் வந்துவிடும்.

- Advertisement -