
தைப்பூச நாள் என்பது முருகப்பெருமானுக்கு உகந்த நாள் அன்றைய தினத்தில் தான் அம்பிகை முருகப்பெருமானுக்கு வேலை வழங்கினார் என்று கூறப்படுகிறது. எந்த அளவிற்கு முருகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் வழிபாடு செய்கிறோமோ அதே போல் முருகனின் கையில் இருக்கும் வேலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களும் பிரச்சனைகளும் தீரும் என்றும் நம்முடைய எதிரிகளின் தொல்லை நீங்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வேலை தைப்பூச நாளன்று எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்யக்கூடிய முக்கியமான நாளாக தைப்பூச நாள் திகழ்கிறது. பொதுவாக முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க்கிழமை போன்ற நாட்களில் பலரும் தங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் வேலை வைத்து வழிபாடு செய்வார்கள். அதே போல் தான் தைப்பூச திருநாளன்றும் வீட்டில் வேலை வைத்து வழிபாடு செய்பவர்கள் சிறப்பான பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த பூஜையை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை காலையிலும் செய்யலாம், மாலையிலும் செய்யலாம். காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபமேற்றி விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். அன்றைய தினம் ஒரு வேளை மட்டும் உணவை எடுத்துக் கொள்ளலாம் அல்லது நீராகாரத்தை எடுத்துக் கொண்டும் விரதம் இருக்கலாம் அல்லது பால் பழங்களை எடுத்துக் கொண்டும் விரதம் இருக்கலாம். முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக இந்த விரதத்தை மாலை 6:00 மணிக்கு வழிபாடு செய்துவிட்டு தான் நிறைவு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது வேலை வைத்து கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும்.
இதற்கு முதலில் ஒரு தாம்பாளம் அல்லது மனைப்பலகை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சற்கோண கோலம் போட்டுக் கொள்ளுங்கள். அதாவது நட்சத்திர கோலம் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு முக்கோணத்திற்கும் நடுவில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த கோலத்திற்கு நடுவில் ஓம் என்று எழுதிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முக்கோணத்திற்கு நடுவில் இருக்கக்கூடிய இடத்தில் சரவணபவ என்று எழுதிக் கொள்ளுங்கள். ஆறு முக்கோணங்களில் ஆறு அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
நடுவில் வேலை வைத்து அந்த வேலிற்கு நாம் வழிபாடு செய்ய வேண்டும். முதலில் அந்த வேலிற்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பஞ்சாமிர்தம் என்பது முருகப் பெருமானுக்கு உகந்த நெய்வேத்தியம் ஆகும். அப்படிப்பட்ட நெய்வேத்தியத்தை வைத்து நாம் முருகனின் வேலிற்கு அபிஷேகம் செய்யும்பொழுது முருகனின் பரிபூரண அருளை பெற முடியும். இதற்கு வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய், தேன், நெய் இவை மட்டும் இருந்தால் போதும். இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் போட்டு முருகனை முழுமனதார நினைத்து நன்றாக பிணைந்து பஞ்சாமிர்தமாக தயார் செய்து அந்த பஞ்சாமிர்தத்தை வைத்து முருகனின் வேலிற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
பிறகு சிவப்பு நிற மலர்களால் “ஓம் சௌ சரவணபவ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அந்த வேலிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்த பிறகு முருகப்பெருமானை நினைத்து அகத்தியர் கூறிய இந்த மந்திரத்தை வேலை பார்த்தவாறு நாம் சொல்ல வேண்டும். அப்படி சொல்லுவதன் மூலம் முருகன் நம்முடைய மனதிலும் நினைவிலும் நிறைந்து இருந்து நம்முடைய அனைத்து விதமான காரியங்களுக்கும் வெற்றியை அருள்வார் என்றும் முருகனின் வேல் நம்முடனே இருந்து நம்மை காக்கக்கூடியதாகவும் நம்மை அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் காத்து இரட்சிக்கும் என்றும் கூறப்படுகிறது.
“ஓம் முருகா குரு முருகா அருள் முருகா
ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே
சண்முகனே சடாசரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க”
“ஓம் ஐம் க்ரீம் வேல் காக்க ஸ்வாஹா”
இதையும் படிக்கலாமே:தீராத கஷ்டங்களைப் போக்கும் தைப்பூசம்
இந்த முறையில் தைப்பூச திருநாளன்று வேலிற்கு நாம் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதன் மூலம் முருகனின் அருளும் முருகனின் கையில் வேலையாக இருக்கக்கூடிய அம்பிகையின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று அனைத்து விதமான வெற்றிகளும் நம் கை வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.