
சில ரோட்டோர கடைகளில் இட்லிக்கு கார சட்னி கொடுப்பாங்க. அதாவது புதினா வைத்து அரைத்த கார சட்னி அது. இட்லிக்கு தொட்டு சாப்பிடவே அத்தனை அருமையாக இருக்கும். ஆனால் அந்த சட்னி மிக மிகக் குறைந்த அளவில்தான் நமக்கு கிடைக்கும். அந்த சட்னி சுவையா இருக்கும். ஆனால் தொட்டுக்கொள்ள நிறைய கொடுக்க மாட்டாங்க. ரோட்டு கடைகளில் கிடைக்கும் புதினா கார சட்னியை நம்முடைய வீட்டில் எப்படி அரைப்பது என்பதை பற்றிய ரெசிபி தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ரெசிபியை படிப்பதோடு மட்டுமல்லாமல் கட்டாயம் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. இப்படி ஒரு சட்னியை இதுவரைக்கும் வாழ்நாளில் சுவைத்திருக்கவே மாட்டீங்க.
முதலில் ஒரு பெரிய கட்டு அளவு புதினா தழைகளை கிள்ளி, தண்ணீரில் போட்டு அலசி தண்ணீரை வடிய வைத்து கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாத புதினா தழைகள் நமக்கு தேவை. சொல்லப் போனால் அழுத்திப் பிடித்தபடி 3 கைப்பிடி புதினா இலைகளுக்கு பின் சொல்லக்கூடிய பொருட்கள் சரியாக இருக்கும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து முதலில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 10 வர மிளகாய்களை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் எடுத்து வைத்திருக்கும் புதினா இலைகளை போட்டு 1 நிமிடம் மட்டும் புதினா இலைகளை வதக்கவும். புதினா இலைகள் சுருங்கி வந்தவுடன் கடாயில் இருந்து புதினா இலைகளை ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள். புதினா இலையின் பச்சை நிறம் மாறாமல் வதக்கவும்.
அடுத்து தக்காளி பழம் 3, பழுத்த தக்காளி பழம் மூன்றை வெட்டிப்போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் தூவி இந்த தக்காளி பழத்தை நன்றாக வதக்கவும். தக்காளிப் பழம் குழைந்து ஜூஸியாக வதங்க வேண்டும். இதோடு சின்ன கோலி குண்டு அளவு புளி சேர்த்து வதக்கி, இதையும் தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்து விடுங்கள்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து முதலில் வறுத்த வர மிளகாயை, மிக்ஸி ஜாரில் போடவும். இதோடு தோல் உரித்த பூண்டு பல் 3, பச்சையாக போடவும். பிறகு சீரகம் 1/4 ஸ்பூன் போட்டு முதலில் இந்த மூன்று பொருட்களை அரைக்கவும். அடுத்து வதக்கி வைத்திருக்கும் புதினா, தக்காளி, புளி இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக போட்டு தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பல்ஸ் மோடில் இதை அரைக்க வேண்டும். நைசாக மொழுமொழுப்பாக அரைக்கக் கூடாது. புதினா இலைகள் குட்டி குட்டியாக கண்ணுக்குத் தெரியும் படி அரைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் புதினாவின் வாசம் இந்த சட்னியில் தூக்கலாக தெரியும். அரைத்த இந்த சட்னிக்கு ஒரு சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டும். இது ஒரு ஸ்பெஷல் தாளிப்பு.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுந்து, வர மிளகாய், கருவேப்பிலை, தோலுடன் நசுக்கிய பூண்டு பல் 10, போட்டு நன்றாக எண்ணெயில் பொன் நிறம் வரும் வரை வறுக்க வேண்டும். தாளிப்பில் எல்லா பொருட்களும் பொன்னிறமாக சிவந்து வந்தவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் இந்த சட்னியை தாளிப்பில் கொட்டி ஒரு கிளறு கிளறி உடனடியாக அடுப்பை அணைத்து விடுங்கள்.
(இந்த சட்னி ரொம்பவும் தண்ணீராக இருக்கக் கூடாது வெங்காய சட்னி போல கொஞ்சம் தல தலவென கெட்டியாக இருக்க வேண்டும்.) இன்னும் கொஞ்சம் கூடுதலாக நல்லெண்ணெய் விட்டு இதை கலந்து சட்னி செய்தால் இந்த சட்னியை மூன்று நாட்கள் பிரிட்ஜில் வைத்து கூட சாப்பிடலாம். கெட்டுப் போகாது.
இதையும் படிக்கலாமே: ரோட்டு கடையில் பாட்டி அரைக்கும் தண்ணீர் சட்னியின் ரகசியம் இது தான். இட்லியோட இந்த சட்னியை பிசைஞ்சு பிசைஞ்சு சாப்பிட்டாலும் ருசி அடங்கவே அடங்காது.
காரசாரமான சூப்பரான இந்த சட்னி ரெசிபிக்கு சுடச்சுட இட்லி அவ்வளவு அருமையாக இருக்கும். தோசை சப்பாத்தி பூரி சுடச்சுட சாதம் இவைகளுக்கு கூட இதை சைடிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். மிஸ் பண்ணாம இந்த சட்டி ரெசிபி ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.