
பெண்கள் அதிக அளவில் விரும்பக்கூடிய ஒரு பொருளாக திகழ்வதுதான் நகைகள். அதிலும் குறிப்பாக தங்க நகைகளை அதிக அளவில் விரும்புவார்கள். தங்கம் எவ்வளவு விலை உயர்ந்தாலும் எப்படியாவது வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கக்கூடிய ஆசையாக இருந்தாலும் மற்றொரு பக்கம் அந்த தங்க நகைகள் தான் அவர்களை மரியாதையாகவும், கௌரவமாகவும் நடத்த உதவும்.
சொந்த பந்தங்களுக்கு நடுவே தங்க நகையை போட்டுக்கொண்டு சென்றால்தான் அவர்கள் மதிப்பார்கள் என்பதற்காகவே பலரும் தங்க நகைகளை வாங்கி அணிவது உண்டு. அதே சமயம் தங்கள் வீட்டில் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால் அதை உடனே சரி செய்வதற்காக வைத்திருந்த தங்க நகையை எடுத்துக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். அப்படி அவசரத்திற்காக கொடுத்த தங்க நகையை விரைவிலேயே திருப்பவும் அதிக அளவு தங்க நகை சேரவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தங்கம் என்றாலே அதற்கு அதிபதியாக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி தாயார். கிரகமாக பார்க்கும் பொழுது குரு பகவான். இவர்கள் இருவரும் நினைத்தால் தான் நமக்கு தங்க நகை என்பது சேரும். ஒரு சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு கையில் பணம் இருக்கும் ஆனால் தங்க நகை வாங்க முடியாது. இன்னும் சிலருக்கோ கையில் பணமிருந்தும் தங்க நகையை வாங்கினாலும் அதை போட்டு அழகு பார்க்க முடியாது. இன்னும் சிலருக்கு தங்கத்தை வாங்குவதற்கு போதுமான அளவு வருமானமே இருக்காது. இப்படி இருப்பவர்கள் அனைவருக்கும் சுவர்ண வசியம் இல்லை என்று அர்த்தம். அப்படி சுவர்ண வசியம் இல்லாத பட்சத்தில் அவர்கள் இடம் தங்க நகை என்பது இருப்பதற்குரிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை செய்வதாக இருந்தால் வாரம் வாரம் செய்யலாம். மாதத்திற்கு ஒரு முறை பௌர்ணமி தினத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம். வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்வதாக இருக்கும் பட்சத்தில் வியாழக்கிழமை அன்றே துளசி செடியிலிருந்து 11 இலைகளை பறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் வெள்ளிகிழமை அன்று துளசி இலையை பறிக்கக்கூடாது.
துளசி என்பது மகாலட்சுமியின் மற்றொரு அம்சமாக திகழ்கிறது. இந்த துளசி இலையை வியாழக்கிழமை அன்றே பறித்து வைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை அன்று காலையில் எப்பொழுதும் போல் வீட்டில் விளக்கேற்றி பூஜையெல்லாம் செய்து முடித்த பிறகு ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த 11 துளசி இலைகளையும் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய வேண்டுதல் என்னவோ நகை சேர வேண்டும் என்றோ அல்லது அடமானத்தில் இருக்க கூடிய நகை வீடு திரும்ப வேண்டும் என்றோ உங்களுடைய வேண்டுதலை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த துளசி இலையை மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து உங்களுடைய வேண்டுதலை முன்வைக்க வேண்டும். இப்படி வைத்து முடித்த பிறகு அந்த துளசி இலைகளை எடுத்துக்கொண்டு போய் நீங்கள் எந்த இடத்தில் நகை வைத்திருக்கிறீர்களோ? அந்த இடத்தில் வைத்து விடுங்கள். வீட்டில் நகையே இல்லை என்று கூறுபவர்கள் எந்த இடத்தில் நகை வைத்திருந்தீர்களோ அந்த இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் தங்க நகைகள் அதிக அளவில் சேருவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அடுத்த வாரம் செய்யும் பொழுது பழைய துளசி இலைகளை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே வெள்ளிக்கிழமை அன்று இந்த வார்த்தையை சொன்னால் பணம் வரும்.
எந்தவித செலவும் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் கிடைக்கக்கூடிய துளசி இலையை வைத்து செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரம். முழு மனதுடன் செய்து முழு பலனையும் பெறுங்கள்.