
இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் தான் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். பலரது இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வம் ஆகவும் திகழக்கூடியவராக முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட முருகப்பெருமானை அவருக்குரிய நாட்களில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அப்படி வழிபாடு செய்வதோடு அவருடைய ஆலயத்திற்கு சென்று அவரை தரிசனம் செய்யும் பொழுது இன்னும் அதிகளவில் பலன் கிடைக்கும். அந்த வகையில் வளர்பிறை சஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றினால் எந்த வேண்டுதல் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த தெய்வத்திற்காக ஒரு தீபத்தை நாம் ஏற்றுவோம். தீபம் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. தீபம் ஏற்றாமல் நாம் செய்யக்கூடிய வழிபாடு பூர்த்தி அடையாது என்று கூட கூறலாம். ஏனென்றால் தீபத்தில் தான் அனைத்து தெய்வங்களையும் நம்மால் ஆகர்ஷணம் செய்ய முடியும். அதே போல் நம்முடைய வேண்டுதலை பொறுத்து தீபம் ஏற்றும் முறையும் மாறுபடும். அந்த வகையில் வளர்பிறை சஷ்டியில் எந்த வேண்டுதலுக்கு எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
முருகப்பெருமானுக்கு உகந்த திதியான சஷ்டி திதி வளர்பிறையில் வருவது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் ஜூன் மாதத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை வருவது அதீத பலனை தரக்கூடியதாக திகழ்கிறது. அன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தாலும் விரதம் இருக்காமல் வழிபாடு செய்தாலும் முருகப்பெருமானின் அருளை நம்மால் பெற முடியும். பலரும் முருகப்பெருமானிடம் பலவிதமான வேண்டுதல்களை முன்வைத்து இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்வார்கள். அப்படி மேற்கொள்ளும் பொழுது முருகப்பெருமானுக்காக சிறப்பாக தீபம் ஏற்றுவார்கள்.
அதிலும் குறிப்பிடத்தக்க தீபமாக திகழ்வது வெற்றிலை தீபம். நம்முடைய வாழ்க்கையில் வெற்றிக்கு மேல் வெற்றியை நாம் பெற வேண்டும் என்றாலோ நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலக வேண்டும் என்று நினைத்தாலோ இந்த தீபத்தை நாம் ஏற்றலாம். ஒரு தாம்பாள தட்டில் ஆறு எண்ணிக்கையில் கிழியாத நல்ல வெற்றிலையாக வைக்க வேண்டும். அதன் காம்பை நீக்கிவிட வேண்டும். அந்த ஆறு வெற்றிலைக்கும் சந்தனம் குங்குமம் வைத்து அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த தீபத்திற்குள் எடுத்து வைத்திருந்த வெற்றிலையின் காம்பை போட்டு விட வேண்டும். இந்த தீபம் வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு எறிய வேண்டும் .
அடுத்ததாக பாலாடைதீபம். சஷ்டி என்றதுமே பலரும் குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக தான் விரதம் இருப்பார்கள். அப்படி குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வளர்பிறை சஷ்டியில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு விரதத்தை மேற்கொள்பவர்கள் அன்றைய தினத்தில் முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அதற்கு நடுவே ஒரு பாலாடையை வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் முருகப்பெருமானை பார்த்தவாறு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் டைமண்ட் கற்கண்டு, பால் போன்றவற்றை முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபத்தை எவர்சில்வரில் இருக்கக்கூடிய பாலாடையில் ஏற்றக்கூடாது. முடிந்த அளவிற்கு வெள்ளி, இண்டானியம் போன்ற உலோகத்திலான பாலாடையில் ஏற்றினால் தான் பலன் கிடைக்கும்.
அடுத்ததாக துவரம் பருப்பு தீபம். நம்முடைய வேலை தொடர்பான எந்த வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்னும் பட்சத்தில் துவரம்பருப்பு தீபத்தை ஏற்றலாம். அதேபோல் கடன் தொடர்பான பிரச்சனைகள், சொந்த வீடு கட்ட ஆசைப்படுபவர்கள் வளர்பிறை சஷ்டி தினத்தில் ஒரு தட்டில் துவரம் பருப்பை பரப்பி அதில் இரண்டாக விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபமேற்றி முருகப் பெருமானை வழிபாடு செய்ய அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.
பொதுவாக வளர்பிறை சஷ்டியில் நாம் முருகப்பெருமானுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்து எந்த வேண்டுதலை வைத்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. இப்படி தீபம் ஏற்றி வைத்த பிறகு சுப்பிரமணிய புஜங்கம், சுப்பிரமணிய அஷ்டகம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல்மாறல் போன்ற முருகப்பெருமானின் பாடல்களை பாடுவதோ அல்லது ஒலிக்கச் செய்வதோ கூடுதல் பலனை தரும்.
இதையும் படிக்கலாமே:ஜூன் முதல் நாள் வாங்க வேண்டிய பொருட்கள்
நம்முடைய வேண்டுதல் முழுமையாக நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து வேண்டுதலுக்கு ஏற்ற தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.