
வரக்கொத்தமல்லியில் இரண்டு வகை உண்டு. நாட்டு வரக்கொத்தமல்லி ஒரு வகை. சாதாரண கொத்தமல்லி ஒரு வகை. சாதாரண கொத்தமல்லி பார்ப்பதற்குப் லைட் கலராக இருக்கும். நாட்டு வரக்கொத்தமல்லி நல்ல டார்க் கலராக இருக்கும். நாட்டு வரக்கொத்தமல்லியில் இந்த சட்னியை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். நாட்டுக் கொத்தமல்லி கிடைக்காதவர்கள் சாதாரண மல்லி விதையிலும் இந்த சட்னியை செய்யலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த சட்னியை அரைத்து வைத்துக் கொண்டால் 2 நாட்கள் வரை கூட கெட்டுப்போகாது. ட்ராவலுக்கு கொண்டுபோக வசதியான சட்னியும் கூட இது. ஆரோக்கியம் தரக்கூடிய வரகொத்தமல்லி சட்னியை சுலபமாக சுவையாக அரைப்பது எப்படி தெரிந்து கொள்வோமா.
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1/4 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, அதில் வரக்கொத்தமல்லி – 1/4 கப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். வரும்க்கும் போது நல்ல வாசம் வீசும். அது வரை வறுக்க வேண்டும். அதேசமயம் வரமல்லி வறுபடும்போது சிடசிடவென பொறிய தொடங்கும். சரியான பக்குவத்தில் வறுத்து இந்த கொத்தமல்லி விதைகளை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஆற வைத்து தண்ணீர் ஊற்றாமல் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். பொடி செய்த வரக்கொத்தமல்லி மிக்ஸி ஜாரில் அப்படியே இருக்கட்டும். (வறுத்த இந்த வரக்கொத்தமல்லியை எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீர் ஊற்றி அறைக்கக் கூடாது. சுவை மாறிவிடும்.)
அடுத்தபடியாக ஒரு கடாயில் – 1 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் உளுந்து – 1 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 10, கறிவேப்பிலை – 1 கொத்து, வர மிளகாய் – 10 லிருந்து 12, சின்ன வெங்காயம் தோலுரித்து – 10 பல், நெல்லிக்காய் அளவு – புளி, இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். (இந்த சட்னி கார சாரமாக தான் இருக்க வேண்டும். வரமிளகாயை உங்கள் காரத்திற்கு ஏற்ப வைத்துக் கொள்ளுங்கள்.)
உளுந்து வறுபட்ட உடன் அடுத்தடுத்த பொருட்களை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இறுதியாக 4 – டேபிள்ஸ்பூன் அளவு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் எல்லா பொருட்களையும் வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கலவை நன்றாக ஆறட்டும்.
ஏற்கனவே வர கொத்தமல்லி விதைகளை மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்திருக்கின்றோம் அல்லவா, அதே மிக்ஸி ஜாரில் அந்த வரமல்லி பொடியுடன், வதக்கி ஆற வைத்திருக்கும் இந்த சின்ன வெங்காயத்துடன் சேர்ந்த மசாலா பொருட்களை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு இதை சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். இந்த சட்னி தாளிக்க கட்டாயம் நல்லெண்ணெய் தான் தேவை. அதே சமயம் அதிகமான நல்லெண்ணெயில் இந்த சட்னியை ஊற்றி வதக்கினால் தான் சட்னி கெட்டுப்போகாது. கடாயில் ஊற்றி இருக்கும் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் நன்றாக காய்ந்ததும், கடுகு – 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, 2 – சிட்டிகை பெருங்காயம், சேர்த்து தாளித்து, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் சட்னி விழுதை கடாயில் சேர்த்து விட வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, சட்னிக்கு தேவையான உப்பு சேர்த்து, சட்னியை கைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள். சட்னியில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் சுண்டி, உருண்டு திரண்டு எண்ணெய் மட்டும் தனியாகப் பிரிந்து வரும் போது, அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயில் சட்னியை ஊற்றி நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் வதக்கினால் போதும் சட்னி தயாராகிவிடும். இந்த சட்னி நன்றாக ஆறியதும் ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் இரண்டு நாட்கள் வரை கூட கெட்டுப் போகாது.