
கோதுமை மாவை வைத்து நாம் எப்போதும் பூரி அல்லது சப்பாத்தியை தான் அதிகமாக செய்வோம். ஏதாவது கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த சப்பாத்தியை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ருசியாக இருப்பதுடன் குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஹெல்தியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் இருக்கும். வாங்க இப்போது இந்த ஹெல்த்தி சப்பாத்தியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த சப்பாத்தி செய்வதற்கு வெந்திய கீரையை வாங்கி நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு மற்ற கீரைகளை சேர்த்து செய்வதை விட இந்த கீரையை சேர்த்து சமைக்கும் போது சுவை நன்றாகவே இருக்கும். அது மட்டுமின்றி குழந்தைகளுக்கு மற்ற கீரைகளை கூட எப்படியாவது கொடுத்து விடலாம். இந்த கீரை எல்லாம் அவ்வளவாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே இது போல செய்து கொடுத்துப் பாருங்கள் நிச்சயமாக விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
இப்போது ஒரு பவுலில் இரண்டு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு கப் சுத்தம் செய்து வைத்த கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் கரம் மசாலா, அரை டீஸ்பூன் ஓமம் பொடி, கால் டீஸ்பூன் இஞ்சி, இரண்டு டேபிள் ஸ்பூன் புளிக்காத தயிர் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு கலந்து வைத்திருக்கும் மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவை பிசையும் போது உங்களுக்கு விருப்பம் இருந்தால் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து கொள்ளலாம். இந்த மாவை 10 நிமிடம் மூடி போட்டு அப்படியே வைத்து விடுங்கள்.
பத்து நிமிடம் கழித்து நாம் சப்பாத்திக்கு மாவு திரட்டுவதை போல சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து கொஞ்சமாக கோதுமை மாவை ஒற்றி எடுத்து சப்பாத்தியாக திரட்டி கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் தோசை கல் வைத்து சூடான பிறகு இந்த சப்பாத்தியை போட்டு இரண்டு புறமும் ஓரளவுக்கு சிவந்து வந்த பிறகு நெய் அல்லது எண்ணெய் ஏதாவது ஒன்று சேர்த்து சுட்டு எடுத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: உருளைக்கிழங்கு இல்லாமல் பூரி மசாலா செய்ய முடியுமா? அது எப்படி? தெரிஞ்சுக்க ஆர்வம் உள்ளவர்கள் ரெசிபியை படியுங்கள்.
இதோ சுவையான ஹெல்தியான கீரை சப்பாத்தி தயார். இந்த சப்பாத்தியில் மிளகாய் தூள், கரம் மசாலா, தயிர் எல்லாம் சேர்த்து இருப்பதால் அனைத்து சுவையும் கலந்து சாப்பிட நன்றாகவே இருக்கும். அது மட்டுமின்றி இதற்கு எந்த ஒரு சைட் டிஷ்ஷுமே கூட தேவையில்லை. இதை அப்படியே சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இதை லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கொடுக்கும் போது ஒரு முழு ஆரோக்கியமான உணவை கொடுத்து அனுப்பிய திருப்தி இருக்கும். இந்த டிஸ்ஸை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.