
மதிய வேளை சாதத்துடன் சாப்பிட ஏதேனும் ஒரு குழம்பு, ஒரு பொரியல் தவறாமல் செய்திட வேண்டும். அப்படி சாம்பார், காரக்குழம்பு, குருமா எந்த வகை குழம்பு செய்தாலும் அதில் ஒரு முருங்கைக்காய் மட்டும் சேர்த்து பாருங்கள். அந்த குழம்பின் மணமும், சுவையும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அதுபோல உருளைக்கிழங்கு பொரியல், கத்தரிக்காய் பொரியல், அவியல் போன்ற அனைத்திலுமே முருங்கைக்காயை சேர்க்க உணவுகளின் சுவை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும். இவ்வாறு முருங்கைக்காய்க்கு என்று தனிப்பட்ட சுவை இருக்கிறது. இப்பொழுது முருங்கைக்காய் அதிகமாக கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதுபோன்ற நேரத்தில் முருங்கைக்காய் வைத்து சுவையான பொரியல் செய்து சாப்பிடலாம். இந்த முருங்கைக்காய் பொரியலை சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த முருங்கைக்காய் பொரியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 25, தக்காளி – 2, பூண்டு – 10 பல், மிளகாய்தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் பூண்டை தோல் உரித்துக் கொண்டு, சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும். அதன்பின் முருங்கைக்காயை ஆறு அல்லது ஏழு துண்டுகளாக வெட்டி வைத்து, தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். அதன் பின் கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் தட்டி வைத்துள்ள பூண்டையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து குழைந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின் இவற்றுடன் அறிந்து வைத்துள்ள முருங்கைக்காய் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
பிறகு இவற்றுடன் ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் கடாயின் மீது தட்டு போட்டு மூடி நன்றாகக் கொதிக்க விடவேண்டும். முருங்கைக்காய் நன்றாக வெந்து, மசாலாக்கள் அனைத்தும் சேர்ந்து தொக்கு பதத்திற்கு சிவந்து வந்தவுடன் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.