
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பாக வாழ வேண்டும், அவருக்கு நடக்கக்கூடிய அனைத்து விதமான சுபகாரியங்களும் தடையின்றி நடைபெற வேண்டும் என்றால் அதற்கு அவருடைய குலதெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பான முறையில் தேவை. யார் ஒருவருக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்க வில்லையோ அவர்களுக்கு எந்த காரியமும் சிறப்பாக நடைபெறாது என்று கூறலாம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு ஆனி பௌர்ணமி நாளன்று ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒரு வழிப்பாடாக திகழ்வதுதான் குலதெய்வ வழிபாடு. அன்றைய தினத்தில் பிரபஞ்ச பேராற்றல் என்பது அதிகமாகவே இருக்கும். அதனால் அன்றைய நாட்களில் நாம் குலதெய்வ வழிபாட்டை செய்யும் பொழுது குலதெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியை குரு பூர்ணிமா என்று கூறுவோம். அதுவும் மூல நட்சத்திரத்துடன் சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி என்பதால் இதற்கு அதிக பலன் கிடைக்கும்.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குரு பூர்ணிமா என்று கூறக்கூடிய ஆனி மூலத்தின் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று குலதெய்வத்தை நினைத்து இந்த ஒரே ஒரு தீபத்தை ஏற்றி ஒரு மணி நேரம் எரிய வைத்தால் போதும். நம் வாழ்க்கையில் இதுவரை இருந்த அனைத்து விதமான சங்கடங்களும் நீங்கி குலதெய்வத்தின் அருளால் சிறப்பான வாழ்க்கையை பெற முடியும். இந்த வழிபாட்டை ஜூலை மாதம் 10ஆம் தேதி இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த தீபத்தை ஆனி மாத பௌர்ணமி நாளில் தான் ஏற்ற வேண்டும் என்று இல்லை. அனைத்து பௌர்ணமி தினங்களில் ஏற்றலாம். ஆனி மாத பௌர்ணமி என்பது குருபூர்ணிமா என்பதால் நம்முடைய குலதெய்வம் நமக்கு குருவாக இருந்து நம்மை நல்வழி நடத்திச் செல்வார் என்று கூறப்படுகிறது.
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு கலச சொம்பு வேண்டும். அந்த சொம்பில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதனுடன் சிறிது உதிரி பூக்கள், சிறிது மஞ்சள், சிறிது குங்குமம், ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு, ஒரு ரூபாய் நாணயம், வெட்டிவேர், ஜவ்வாது, பச்சை கற்பூரம் போன்றவற்றில் எது கிடைக்கிறதோ அதை எடுத்து போடலாம். அதில் போடக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலச சொம்பில் தண்ணீர் ஊற்றி இவை அனைத்தையும் போட்டுவிட்டு கலசத்திற்கு பூக்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
கலச சொம்பிற்கு மேல் ஒரு தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டிற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் மஞ்சள் அரிசி என்று கூறக்கூடிய நெய் கலந்த அட்சதை போட வேண்டும். பிறகு அதனுடன் சிறிது உதிரிப்பூக்களையும் போட்டுவிட்டு அதற்கு மேல் மற்றொரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் வடக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபத்தையே நாம் குலதெய்வம் ஆக நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்பொழுது குலதெய்வத்தின் பெயரை 108 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் அந்த தீபத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். நம்மால் இயன்ற ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சர்க்கரை பொங்கல் வைப்பது கூடுதல் பலனைத் தரும் அல்லது தங்களுடைய குலதெய்வத்திற்கு உகந்த பொருட்களையும் பிரசாதமாக வைக்கலாம்.
இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக ஆனி பௌர்ணமி வழிபாடு
குலதெய்வ வழிபாடு நம்முடைய வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்த வழிபாடாக திகழ்கிறது. அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டை முழு நிலவு பிரகாசமாக இருக்கக்கூடிய நாளில் செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கருமை முற்றிலும் நீங்கி பிரகாசம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.