
இந்த வருடம் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்று கூறுகிறோம். இது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய சதுர்த்தி என்பதால் அன்றைய தினத்தில் அனைவரும் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வார்கள். அப்படி விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து நாம் பரிகாரம் செய்தோம் என்றால் விநாயகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தரித்திரம் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நாட்கள் என்று சில நாட்கள் இருக்கும். வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய நாட்கள் மிகவும் பிரசித்தி பெற்ற நாட்களாக திகழும். அந்த வகையில் வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடியது தான் விநாயகர் சதுர்த்தி. இந்த விநாயகர் சதுர்த்தியை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடுபவர்கள். விநாயகர் நவராத்திரி என்று 11 நாட்கள் வழிபாடு செய்வார்கள். 11 நாட்களும் விநாயகர் பெருமானுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் அவர் மகிழ்ந்து நமக்கு நன்மைகளை வாரி தருகிறோம்.
பொதுவாகவே விநாயக சதுர்த்தி அன்று விநாயகரை வீட்டிற்கு வாங்கி வந்து அவருக்கு உரிய பூஜைகள் வழிபாட்டு முறைகளையும் நாம் மேற்கொள்வோம். அப்படி மேற்கொள்ளும் பொழுது ஒரு சிறிய பரிகாரத்தையும் செய்தோம் என்றால் விநாயகப் பெருமானின் அருளால் நமக்கு நன்மைகள் உண்டாகும். அந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இதற்கு சிவப்பு நிற துணி வேண்டும். அதேபோல் கோமதி சக்கரம் ஒன்று வேண்டும். அடுத்ததாக முழுமையாக இருக்கக்கூடிய கொட்டை பாக்கு ஒன்று வேண்டும். இந்த கொட்டை பாக்கு நாட்டு மருந்து கடைகளில் முழுமையாக கிடைக்கும். அதையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தாம்பாளத்தில் இந்த சிவப்பு துணியை விரித்து அந்த துணியில் கோமதி சக்கரத்தையும், கொட்டை பாக்கையும் வைக்க வேண்டும். இது பூஜை அறையில் ஒரு இடத்தில் ஓரமாக வைத்து விடுங்கள். 11 நாட்கள் இதை எடுக்கவே கூடாது.
முதல் நாள் அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று இந்த தாம்பாளத்திற்கு முன்பாக ஒரே ஒரு மோதகத்தை வைத்து “ஓம் கம் கணபதயே நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்துவிட வேண்டும். அடுத்த நாள் இதே போல் தாம்பாளத்திற்கு முன்பாக இரண்டு மோதகத்தை வைத்து அதே மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு மோதகத்தை அதிகரித்துக் கொண்டே வைத்து மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும். 11 வது நாள் 11 மோதகத்தை வைத்து மந்திரத்தை 108 முறை கூறி வழிபாடு செய்து முடித்து விடுங்கள்.
12-வது நாள் இந்த துணியில் இருக்கக்கூடிய பொருட்களை அப்படியே மூட்டையாக கட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் மந்திரத்திற்கு உரிய சக்தி அனைத்தும் அந்த பொருட்களில் சேர்ந்திருக்கும். ஏற்கனவே அந்த பொருட்களில் பல தெய்வீக சக்தி இருக்கும் பட்சத்தில் விநாயகரின் மந்திரமும் அதனுடன் சேர்ந்திருக்கும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய துரதிஷ்டம் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டம் ஏற்படும். மோதகத்தை பூஜை முடிந்த பிறகு வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:பண விரயத்தை தடுக்கும் அடுப்பங்கரை புளி
மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் சதுர்த்தி பரிகாரத்தை மேற்கொள்பவர்களுக்கு அதிர்ஷ்டம் அவர்களை தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.